அமைச்சர் கே.என்.நேரு மீதான ‘ஊழல்’ வழக்கு... திமுக ‘இமேஜ்’ டேமேஜா?

தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் முறை​கே​டாக டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், உதவி பொறி​யாளர், இளநிலை பொறி​யாளர், நகரமைப்பு அலுவலர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்​சம் ரூபாய் வரை லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​டு, பணி நியமனம் நடந்துள்ளதாகவும் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடந்த 2025 அக்டோபர் 27-ம் தேதி கடிதம் அனுப்​பியது.

அதில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோதரர்களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணனுக்கு சொந்​த​மான இடங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யின்​போது கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில், மிகப் ​பெரிய முறை​கேடு நடந்​திருப்​பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள​தாக அமலாக்​கத் துறை தெரிவித்திருந்​தது. நேரு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை மொத்தம் மூன்று முறை கடிதம் அனுப்பியது.

அமலாக்கத் துறை அனுப்பியகடிதத்​தின் அடிப்​படை​யில் அமைச்​சர் நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் உள்ளிட்​டோர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கக் கோரி மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் மற்​றும் அதி​முக எம்​.பி. இன்​பதுரை ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தனித்​தனி​யாக வழக்கு தொடர்ந்​தனர்.

தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை ஏற்​கெனவே நடந்​தது. அப்போது சம்பந்தப்பட்ட தரப்புகள் பல்வேறு வாதங்களை முன்வைத்தன. அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “அதி​முக எம்​.பி. இன்​பதுரை, தேர்​தல் நேரத்தில் அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இந்த வழக்கை தொடர்ந்​துள்​ளார்” என்றார்.

அமலாக்​கத் துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், “இந்த விவ​காரத்​தில் டிஜிபிக்கு வெறும் கடிதம் மட்​டுமின்​றி, அனைத்து குற்​றச்​சாட்​டு​களுக்​கும் டிஜிட்​டல் ஆவணங்​களை அனுப்பி அமலாக்​கத் துறை தனது கடமையை முறையாக செய்​துள்​ளது. அந்த ஆதாரங்களின் அடிப்​படை​யில் ஆரம்​பகட்ட விசாரணையே நடத்​தாமல், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நேரடி​யாகவே வழக்கு பதிவு செய்ய முடி​யும். ஆனால், தமிழக போலீ​ஸார் தங்​களது கடமையை செய்​ய​வில்​லை” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “தமிழக நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் நடந்​துள்ள இந்த முறை​கேடு மூல​மாக பல நூறு கோடி ரூபாய் லஞ்​சப் பணம் ஹவாலா முறை​யில் கைமாறியுள்ளதாக அமலாக்​கத் துறை ஆதாரப்பூர்வ​மாக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. இந்த விவ​காரத்​தில் அரசு உயர் அதிகாரி​கள், அமைச்​சரின் உறவினர்​கள், அரசியல்வாதிகளின் நெருங்​கிய நட்பு வட்​டாரங்​கள், விண்ணப்ப​தா​ரர்​கள் என கூட்​டணி அமைத்து செயல்பட்டுள்​ளனர்.

தேர்வு முடிவு வெளி​யாகும் முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு அதுகுறித்த விவரம் முறைகேடாக தெரிவிக்​கப்​பட்​டு, பணம் வசூலிக்கப்பட்டுள்​ளது. 2,538 பேரும் பணி​யில் சேர்ந்து 6 மாதங்​களுக்கு மேல் ஆகி​விட்​டது. நேர்​காணல் கடிதத்துடன் 10 ரூபாய் நோட்டை அடை​யாள​மாகக் கொடுத்து கோடிக்​கணக்​கில் லஞ்​சப் பணம் ஹவாலா முறை​யில் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​கான ஆதாரங்களை வாட்​ஸ்​அப் உரையாடல்​கள், ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் அமலாக்​கத் துறை நிரூபித்​துள்​ளது.

முறை​கேடு நடந்​துள்​ள​தாக தகவல்​களை அனுப்​பியது புலனாய்வு அமைப்​பான அமலாக்​கத் துறை ஒன்றும் மூன்றாம் நபர்​கள் அல்ல. அவ்​வாறு ஆதா​ரங்​களு​டன் கடிதம் அனுப்பி மூன்​றரை மாதங்​களுக்கு மேல் ஆகின்றன. ஆனாலும், தமிழக போலீ​ஸார் இன்​னும் நடவடிக்கை எடுக்​காமல், ஆரம்​பகட்ட விசா​ரணை என்று கூறி வழக்கு பதிவு செய்​யாமல் இழுத்​தடிப்​பது அதிருப்தி அளிக்​கிறது. எனவே, அமலாக்​கத் துறை அனுப்​பிய ஆதாரங்​களின் அடிப்​படை​யில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீ​ஸார் தாமதம் இன்​றி, சம்பந்தப்பட்டவர்​கள் மீது உடனடி​யாக வழக்கு பதிவு செய்ய வேண்​டும். விரி​வான வி​சா​ரணை நடத்​தி, அதன் அடிப்​படை​யில் சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிப​தி​கள்​ உத்​தரவிட்​டுள்​ளனர்​.

இதன் தொடர்ச்சியாக, “மக்​கள் வரிப்​பணத்தை உறிஞ்​சி, கமிஷனில் கொழுக்​கும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்​குநூறாக இடிந்து விழும் நாளுக்​கான கவுண்​ட​வுன் தொடங்​கி​விட்​டது” என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதற்கெல்லாம் ரியாக்ட் செய்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இது ஒன்றும் பின்னடைவு அல்ல. திமுகவின் சட்டத் துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள்” என்றார் ஆர்.எஸ்.பாரதி.

அமைச்சர் கே.என்.நேரு மீதான ‘ஊழல்’ வழக்கு... திமுக ‘இமேஜ்’ டேமேஜா?
Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in