அதிமுகவில் காளியம்மாள் பேச்சாளரா, வேட்பாளரா?

எடப்பாடி பழனிசாமி கையில் முடிவு

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி சிறிது காலம் ஓய்வில் இருந்த அக்கட்சியின் முன்னாள் மகளிர் பாசறை நிர்வாகி காளியம்மாள், அதிமுகவில் இணைந்திருக்கும் நிலையில், இந்த தேர்தலில் இருந்து மீண்டும் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் தற்போது வசிக்கும் புகுந்த ஊரான நாகை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என்று செய்திகள் அடிபடுகின்றன. இல்லையில்லை அவர் சொந்த ஊரான மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு அறிமுகமாகி உள்ளதால், அங்கு தான் போட்டியிடுவார் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

நாகை தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட தங்க.கதிரவன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம் உள்ளிட்டவர்கள் சீட்டுக்காக முட்டி மோதி வருகின்றனர். இப்படி பலத்த போட்டியில் இருக்கும் இவர்கள், இந்த தொகுதியை காளியம்மாளுக்காக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

அதேபோல, மயிலாடுதுறை தொகுதியை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என பாஜகவும் ஒற்றைக்காலில் நிற்கிறதாம். பாமக தரப்பும் இந்த தொகுதியை கேட்டு மல்லுக்கட்டுகிறது.

அதுமட்டுமில்லாமல் மயிலாடுதுறை தொகுதியில் மீனவர் வாக்கு மிக சொற்பமான அளவிலேயே உள்ளதால், இந்த தொகுதியை காளியம்மாளுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என்றும், இந்த தொகுதி கூட்டணிக்கு செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அதிமுக தரப்பில் பேசியபோது, இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஸ்டார் பேச்சாளராக அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய காளியம்மாளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு வாகனமும் அளிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அவரது செயல்பாடுகளை வைத்து அடுத்துவரும் தேர்தல்களில் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்கிறார்கள். அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, அவரை ஏதாவது ஒரு தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதற்கு ஆட்சேபனை எதுவும் இருக்கப்போவதில்லை என்கிறார்கள்.

ஸ்டார் பேச்சாளராக தேர்தல் களத்தை பரபரக்கக் செய்வாரா? அல்லது வேட்பாளராகி போட்டியிடுவாரா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

அதிமுகவில் காளியம்மாள் பேச்சாளரா, வேட்பாளரா?
பாஜக 27, பாமக 18, அமமுக 11 - அதிமுக கூட்டணியில் ‘சுமுக’ தொகுதிப் பங்கீடும், இபிஎஸ் ‘கணக்கு’ம்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in