திமுகவுக்கு ‘குறையும்’ தொகுதிகள் எத்தனை?
திமுகவின் மூத்த அமைச்சர்கள் குழு நடத்திய மறைமுக பேச்சுவார்த்தையை, தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிக்கும், விசிக 8 தொகுதிக்கும் ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மதிமுக, மார்க்சிஸ்ட் மட்டும் இன்னும் இறங்கி வராமல் இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த கட்சிகளுடன் திமுக பேசி வருகிறது. இதில் மார்க்சிஸ்ட், மதிமுகவுக்கு தலா 4 தொகுதிகளும் ஒதுக்குவதற்கு திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால் அந்த கட்சிக்கு இடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், திமுக நேரடியாக 160 தொகுதிகளுக்கு குறையாமலும், உதயசூரியன் சின்னத்தில் 175 இடங்கள் வரையும் களமிறங்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அனைத்து தோழமை கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டை துரிதமாக முடித்து விரைவில் ஒப்பந்தமிட முடிவு செய்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் 188 இடங்களிலும் போட்டியிட்டது. இம்முறை கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால் அதைவிட 10 முதல் 15 தொகுதிகள் வரை குறைவாக போட்டியிட வேண்டிய நிலையில் திமுக உள்ளது.