குடைச்சலுக்கு ரெடியாகும் பாஜக... திமுகவுக்கு நெருக்கடியா?
திமுகவுக்கு எதிரான விவகாரங்களை தூசு தட்டி எடுத்து குடைச்சல் கொடுக்கத் தயாராகி வருகிறது பாஜக. அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றியும் சர்ச்சைகள் வட்டமடிக்கின்றன. நகராட்சி நிர்வாகத்தில் பணியிடங்களை நிரப்புவதில் நேரு தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதாக கடந்த 2025-ல் அமலாக்கத் துறை தமிழக டிஜிபி-க்குக் கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், நேரு மற்றும் அவரது சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், "அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளதால், தாமதமின்றி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது. வழக்குப் பதிவானால் கொஞ்சமும் தாமதிக்காமல் மத்திய அரசின் அமலாக்கத் துறை தங்களைத் தேடி புறப்பட்டு வந்துவிடும் என்பதால் நேரு முகாமும் இப்போது உச்சகட்ட உதறலில் இருக்கிறது.
இந்த நெருக்கடிகள் குறித்து மதுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா? ஆட்சி, பதவி ஏன், உயிரே போனாலும் கவலைப்பட மாட்டோம். எதிர்க்கட்சிகளிலேயே திமுக-வினர் மீதுதான் அதிகமான ரெய்டுகள் நடக்கின்றன. சிபிஐ, இடி, ஐடி என எந்தச் சித்து விளையாட்டுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என ஆவேசமாக முழங்கினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “மக்கள் மத்தியில் திமுக-வுக்கு எதிரான எதிர்ப்பு அலை இல்லை. எனவே, செயற்கையான காரணங்களை உருவாக்கி பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியோ, “எல்லாவற்றிற்கும் பாஜக-தான் காரணம் எனச் சொல்வது தவறு. நீதிமன்றத்தில் வழக்குகள் முகாந்திரம் இருந்தால் தான் விசாரிக்கப்படுகின்றன. திமுக-வினரின் இத்தகைய பேச்சுகள் பாஜக மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தையே காட்டுகிறது” என்கிறார். யார் என்ன சொன்னாலும், “திமுக-வை ஒழிக்க வேண்டும்” எனப் பேசி வரும் பாஜக தலைவர்கள், இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியை அத்தனை எளிதில் ஜொலிக்கவிட்டுவிட மாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துவிட்டன.