தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவும் தாக்கமும் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்தம் மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்கள் மூலம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால் இவற்றை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவால் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 இடங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு தென் மாநிலங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
அனைத்து தென்மாநிலங்களிலும் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.
இதற்கு கடந்த ஏப்ரல் மாத நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவான விளக்கம் அளித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதன் அடிப்படையில் தற்போது மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் என்ற வகையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 815 ஆக அதிகரிக்கும். இதில் 33 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். வரும் 2051-ம் ஆண்டு வரை மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படாது.
தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஐம்பது சதவித உயர்வு அடிப்படையில், தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 80 தொகுதிகளில் இருந்து 120 ஆகவும், மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் இருந்து 72 ஆகவும், மேற்கு வங்கத்தில் 42-ல் இருந்து 63 ஆகவும், பிஹாரில் 40-ல் இருந்து 60 ஆகவும் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும். வரும் 2029-ம் ஆண்டில் 815 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 292 எம்.பி.க்கள் இருந்தனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் உடைந்தது. அந்த கட்சியின் 20 மக்களவை எம்.பி.க்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தனர். இதனால் பாஜக கூட்டணியின் பலம் 318 ஆக அதிகரித்தது.
அசாம் மாநிலம் நகோன் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன் காரணமாக மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 319 ஆக அதிகரித்திருக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்டணிக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மத்திய அரசுக்கு கூடுதலாக 41 எம்.பி.க்கள் மட்டுமே தேவை என்ற சூழலில் திமுகவின் 22 எம்.பி.க்கள், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸின் 8 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் அணி மாறி வாக்களிக்கக்கூடும் என்றும், சமாஜ்வாதி உள்ளிட்ட சில கட்சிகள் புறக்கணிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.
மாநிலங்களவை நிலவரத்தை எடுத்துக்கொண்டால், ஆம் ஆத்மி கட்சியின் 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கடந்த ஏப்ரலில் பாஜகவில் இணைந்தனர். இதேபோல கடந்த ஜூலையில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். இதன்மூலம் மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 151 ஆக உயர்ந்திருக்கிறது.
மாநிலங்களவையில் தற்போது 243 எம்.பி.க்கள் உள்ள நிலையில், மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற 162 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக கூட்டணிக்கு திமுகவின் 8 எம்.பி.க்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 4 எம்.பி.க்கள் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பின்னணியில்தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நியாயமான தொகுதி மறுவரையறை கோரிக்கைகளை ஏற்ற மசோதாவுக்கு திமுக ஆதரவு.
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக தொகுதி மறுவரையறை சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது, 2024-ஆம் ஆண்டு முதல் திமுக மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி.
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகள் உயர்வு எனும் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்கு சாத்தியமானதில் நமக்கு சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறை நடந்திடத் திமுக ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கம், தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்டணிக்கு 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், திமுக ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் வெகுவாக கூடியுள்ளது என டெல்லி அரசியல் வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், திமுகவின் முடிவுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜகவின் பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது. பாஜகவின் வாக்குறுதிகளை நம்பினால் திமுகவுக்கு தீராப்பழி ஏற்படும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்ன நிலைப்பாடோ அதுவே நமது நிலைப்பாடாகவும் இருக்க வேண்டும்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
“தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இதன்மூலம் திமுக வரலாற்றுப் பிழையைச் செய்திருக்கிறது. பாஜகவின் சதித்திட்டத்துக்கு திமுக துணைபோவது போல் உள்ளது. திமுகவின் நிலைப்பாடு தேசத்துக்கே ஆபத்தை விளைவிக்கும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
“இந்த மகத்தான நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடித்தளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தருணத்தில், மவுனமாக இருந்தவர்களையும், தங்களின் பொறுப்பைக் கைவிட்டவர்களையும், அரசியலமைப்பைக் காக்க வேண்டிய கடமையில் இருந்து பின்வாங்கியவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.
அதேவேளையில், திமுக எம்.பி. ஆ.ராசா , “இது இப்போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் அவர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு என்ன முடிவை எடுத்தோமோ, அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சென்னைக்கு அழைத்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அந்த குழு ஒரு நாள் முழுவதும் விவாதித்து, என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியில் திமுக இல்லை என்பதற்காக வலிந்துபோய் ஏதோ ஒரு புதிய முடிவை எடுத்ததுபோல சித்தரிப்பது என்பது மிகக் கேவலமான செயல். அது அரசியல் நாகரிகம் அல்ல” என்று ஆ.ராசா கூறியுள்ளார்.