மாணிக்கம் தாகூர் ‘வீழ்வார்’ என நினைத்தார்களோ?!
தொடர்ந்து திமுகவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துவந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் தலைமை கண்டித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அறிவாலய சீனியர்கள், “திமுக-வின் புகாரை அடுத்து காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. அதற்கு அவர், ‘திமுக நம்மைச் சுத்தமாக மதிக்கவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட விருதுநகர் தொகுதியில் சரியாக வேலை செய்யவில்லை. எனவேதான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டேன், அப்போதுதான் கட்சி வளரும்’ எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேலிடம், ‘எதுவாக இருந்தாலும் அகில இந்திய தலைமையின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்து தாகூரைக் கண்டித்திருக்கிறது” என்றனர்.
காங்கிரஸ் தலைமை மாணிக்கம் தாகூரை அழைத்து கண்டித்ததாகச் சொல்லப்படும் தகவல் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கும் நிலையில், தனது எக்ஸ் தள பக்கத்தில் மாணிக்கம் தாகூர், ‘தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பாரதியாரின் வரிகளைப் பதிவிட்டிருக்கிறார். இதுவும் திமுக-வைச் சீண்டும் வகையில் இருப்பதாகச் சொல்லி திமுக வட்டாரம் இன்னும் சூடாகி வருகிறது.