சென்னை சொத்து வரி பிரச்சினை... நடந்தது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு அதிக வருவாய் இதன் மூலமே கிடைக்கிறது. ஏற்கெனவே சொத்து உரிமையாளரின் சுயமதிப்பீடு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது.
அதன் பின்னர் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு துல்லிய சொத்து வரி மதிப்பீட்டை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதில் குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துக்கு மறுமதிப்பீடு செய்து, அவர்களுக்கு மட்டும் மாநகராட்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, சுமார் 10 மடங்குக்கு மேல் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம் கூறும்போது, “வட சென்னையில் ஒரு சொத்தின் உரிமையாளர் இதுவரை அரையாண்டுக்கு 295 ரூபாய் செலுத்தி வந்தார். இப்போது 3,255 ரூபாயாக உயர்த்தி மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
இதை கடந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டு முதல் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. இதன்படி, கடந்த நிதியாண்டின் 2-ம் அரையாண்டு, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு, அக்டோபரில் 2-ம் அரையாண்டு என ஒரு பெரிய தொகையை ஒரு நடுத்தர சொத்து உரிமையாளரால் எப்படி செலுத்த முடியும். இந்த சொத்து வரி உயர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்றார்.
சென்னையில் 100 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்திருந்தார். மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவும், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், துல்லிய சொத்து வரி மதிப்பீட்டை நிறுத்திவைப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில், Under Assessed எனப்படும் குறைவான மதிப்பீடு செய்யப்பட்டதாக கண்டறியப்பட்ட சில சொத்துகளுக்கான வரி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது.
இந்த வரி மாற்றியமைப்பு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் பெறப்பட்டன. இந்த திருத்திய மதிப்பீடு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பிய கோரிக்கைகளை கவனமாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்றியமைப்பை உடனடியாக நிறுத்திவைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, வரித் தொகையானது மாற்றி அமைக்கப்படுவதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அளவுக்கே மீண்டும் மாற்றப்படும். மாற்றியமைக்கப்பட்ட வரித்தொகையை ஏற்கெனவே செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை அடுத்தடுத்த அரையாண்டுகளுக்கான முன்பண வரியாக ஈடு செய்யப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.