பாஜக Vs தவெக | விஜய் ‘திருப்பரங்குன்ற’ மவுனம் ஏன்?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய், இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார். அதேநேரத்தில், திமுகவின் முதுகுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல், தவெகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என தொடக்கம் முதலே பாஜக வலியுறுத்தி வந்தது. மேலும், பல்வேறு தரப்பினரும், விஜய் இந்த விவகாரத்தில் வாய் திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால், விஜய் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

அதேநேரத்தில், விஜய் மவுனமாக இருப்பதே நல்லது என தவெகவில் புதிதாக இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தற்போது, பாஜக - தவெகவினரிடையே வார்த்தை போரை ஏற்படுத்தி உள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, அண்ணாமலை கூறுகையில், “கம்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கம்முன்னு இருக்கணும். கும்முன்னு இருக்க வேண்டிய இடத்தில் கும்முன்னு இருக்கணும் என விஜய் ஒரு படத்தில் வசனம் பேசியிருப்பார். ஆனால், எல்லா இடங்களிலும் விஜய் கம்முன்னு இருப்பது சரியல்ல. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேசவே மாட்டேன் என்றால் அது எந்த மாதிரியான அரசியல். வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்” என தெரிவித்திருந்தார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், “திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்சினை. தமிழக மக்கள் ஒற்றுமை உடன்தான் இருக்கிறார்கள். இதில் ஆதாயம் தேட பாஜகவும், திமுகவும் முயற்சிக்கிறது.

மேலும், அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்போது எதை பேச வேண்டுமென்று அவர் சொல்ல தேவையில்லை. தலைவருக்கு தெரியும்” என்றார் அருண்ராஜ். அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும் வகையில் “அண்ணாமலை என்கிற இந்த நாயின் வாலை நிமிர்த்த முடியாது. இது, அப்படித்தான் இருக்கும். ஏனெனில், உண்மையை மட்டும் பேசும் நாய். இது, ஜால்ரா அடிக்கிற நாய் கிடையாது. மோடிக்கு, மக்களுக்கு நன்றியுள்ள விசுவாசமான நாய் இது.

சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்க, நான் அரசு பதவியை ராஜினாமா செய்யவில்லை. உன்னதமான கோட்பாட்டிற்காக வந்திருக்கிறேன். ஜால்ரா அடித்துதான், ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால், அந்த பதவி எனக்கு தேவையில்லை” என்றார் அண்ணாமலை.

தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரோ, “களத்தில் இருப்பவர்களை பற்றிதான் தவெக பேசும். களத்தில் இருப்பவர்களுடன்தான் போட்டி. களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அண்ணாமலை போன்றோர் ஒரு ஓரமாக நின்று கத்தி கொண்டேருக்கட்டும்” என்றார்.

இந்த விவகாரத்தில், திமுக செய்தித் தொடர்புக் குழு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறும்போது, “திருப்பரங்குன்றம் மதம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, புதிய இயக்கம் என்பதால் கருத்து தெரிவிக்க தயங்கிருக்கலாம். அதேநேரத்தில், விஜய் எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காப்பது, அவர் பாஜகவின் மற்றொரு கிளை அலுவலகமாக இயங்கி, அவர்களுக்கு சேவகம் செய்கிறாரோ என கருதத் தோன்றுகிறது.

ஆழமான பார்வை இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச கருத்தாவது இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக திமுகவை விமர்சிக்கும்போது வாய் கிழிய பேசுகிறார். பாஜகவை பற்றி பேசும்போது வாயை மூடி பேசுகிறார்” என்றார்.

பாஜக Vs தவெக | விஜய் ‘திருப்பரங்குன்ற’ மவுனம் ஏன்?
Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in