திமுகவுக்கு ‘டஃப்’ கொடுக்க அமித் ஷா ப்ளான்!
அதிமுகவுக்கு முழுமையாக கிடைக்கக்கூடிய வாக்குகள், சிதறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிமுக-வை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
இதனிடையே, ஓபிஎஸ்ஸை அமித் ஷா சந்தித்ததால், பாஜக தலைமை மீது பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓபிஎஸ் - பழனிசாமி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமித் ஷா திட்டமிட்டு வருகிறார். அந்த வகையில், பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்கிய பிறகு, அந்தக் கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க அமித் ஷா முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வேலைகள் முடிந்த பின்பு, ஓரிரு வாரத்தில் அமித் ஷா தமிழகம் வருவார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தி திமுக கூட்டணிக்கு கடும் போட்டியை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார் அமித் ஷா.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. பல தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் சேர்த்து வாங்கிய வாக்குகளை விட திமுக குறைவான வாக்குகளையே வாங்கி இருந்தது. எனினும், வாக்குகள் பிரிந்ததால் திமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதுபோன்ற நிலை வரக்கூடாது என்றும், அதற்காக திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் சிதறுவதைத் தடுக்க பல கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் வரும்போது, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமித் ஷா தனது வருகையின் போது கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பார் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.