ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்தது ஏன்?

கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் மக்கள் போராட்டம் ஒன்று வெடித்ததை மறந்திருக்க முடியாது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் வெகுண்டெழுந்து அதிபர் மாளிகையை சூறையாடி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். அதேபோன்றதொரு நிலவரம் தான் இப்போது ஈரானில் நிலவுகிறது.

நாட்டில் நிலவும் பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பின்மை ஆகியனவற்றுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. ஆனால், பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தோடு இப்போது ஈரானின் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனிக்கு எதிராகவும் அதிருப்தி அலைகள் வலுத்துள்ளது.

போராட்டக் களத்தில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, தண்ணீர், எரிபொருள் நெருக்கடி ஆகியனவற்றுக்கு எதிராக முழக்கங்கள் எழுவதோடு, கமேனிக்கு எதிரான கண்டனம் வலுத்துள்ளது.

ஈரான் நீண்ட காலமாக இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ளது. காசா மீதான தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் அழிப்புக்காக இஸ்ரேல் லெபனான், சிரியா என்று பல நாடுகள் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. அந்த வரிசையில் ஈரானை சீண்டியது இஸ்ரேல். இதற்கு ஈரான் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. 12 நாட்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதல் ஈரான் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பதம் பார்த்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஈரானுக்கு அமெரிக்கா நீண்ட காலமாகவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இப்போது இது இன்னும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கொண்டுள்ளன. இவை ஈரான் பொருளாதாரத்தின் மீது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் குறிப்பாக ஈரானின் நாணயம் ரியால் மீதான தாக்கத்தை கடுமையாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரியால் மதிப்பு சரிவு 40 முதல் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரியால் மதிப்பு சரிவு, பணவீக்கத்துக்கு வழிவகுத்தது. இதனால் பால், தானியங்கள் போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% அதிகரித்தது. இதுதான் சாமானிய மக்களை வீதிகளுக்குத் தள்ளியுள்ளது.

எற்கெனவே மாஷா அமினிக்கு எதிரான போராட்டத்திலேயே உயிரை துச்சமென நினைத்து போராடிய இளைஞர்கள் இந்த முறை அதைவிட ஆக்ரோஷமாக அரசுக்கு எதிராக உச்சத் தலைவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த, அதிகாரமிக்க ராணுவ மற்றும் பாதுகாப்புப் படையான இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படைகளையும் எதிர்க்க மக்கள் துணிந்துவிட்டனர்.

இந்தப் படைதான் ஈரானின் உச்ச தலைவர் கமேனியுடன் நேரடி தொடர்பு கொண்ட இந்தப் படைக்கு அஞ்சாமல், கமேனியை காலி செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

அரசு அலுவலகங்களை சூறையாடுவது, கமேனியின் சிலையை நொறுக்கி வீழ்த்துவது என போராட்டக்காரர்கள் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், “அமைதி வழியில் போராடும் மக்களுக்கு எதிராக ஈரான் வன்முறையை நிகழ்த்தினால், அமெரிக்கா தலையிடும். நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஈரானில் மக்கள் போராட்டம் வெடித்தது ஏன்?
திமுக vs தவெக vs நாதக - மைனாரிட்டி வாக்கு வங்கி யாருக்கு?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in