யார் இந்த அயத்துல்லா அலி காமேனி? - எழுச்சியும் வீழ்ச்சியும்!

அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவரான 88 வயது அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். ஈரான் தலைநகர் டெஹ்ரானின் மத்திய பகுதியில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் அலுவலகம் செயல்பட்டது. இங்கு காமேனி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் ராணுவத்தின் 40-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக இஸ்ரேலின் மொசாட் உளவுப் படைக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேலின் போர் விமானங்கள் உடனடியாக காமேனி அலுவலகத்தை குறிவைத்து 30 குண்டுகளை வீசின. இதில் அவரது அலுவலகம் தரைமட்டமானது. உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற ராணுவ தளபதிகள் அனைவரும் உயிரிழந்தனர். காமேனி உயிரிழந்ததை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவையொட்டி 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். 7 நாட்கள் பொது விடுமுறை விடப்படும் என்றும் அறிவித்துள்ளது. காமேனியின் பின்புலம் குறித்து சற்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயத்துல்லா அலி காமேனிக்கு முன் காமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். காமேனி, 1939-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஜாவேத் காமேனி ஒரு மதகுரு. 1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்தது எனலாம். ஷா வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈரான் மேற்கத்திய கலாச்சாரத் தன்மையில் மூழ்க ஆரம்பித்திருந்தது.

அப்போது அயோதுல்லா காமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து போராடி வந்தார். ருஹொல்லா காமேனியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புரட்சியில் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்ததால், ஷா ஆட்சியின் ரகசிய போலீஸாரால் காமேனி கைதும் செய்யப்பட்டார். தொடர்ந்து ஷா குடும்பத்தினர், ஈரானில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் தலையீட்டால் பொருளாதார ஏற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஈரான் எண்ணெய் வளம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர, அங்கு எந்த செழிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஈரான் மதகுருக்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் இணைந்து ஒரு புரட்சியை நடத்தினர். அதன் விளைவாக 1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டது.

ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானார் காமேனி. முகமது அலி ரஜாயி ஈரான் அதிபரானார். ஆனால், ஒரு குண்டு வீச்சு நிகழ்வில் முகமது அலி கொல்லப்படவே, 1982-ல் ஈரான் அதிபரானார் காமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு தன் கடைசி நாள் வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தார். ஒரு சிறந்த கவிஞர், கவிதை ரசிகர். அவருடைய அவையில் எப்போதும் அரசைப் புகழ்ந்துபாடும் கவிராயர்கள் சூழ்ந்திருப்பர். அவரும் அப்படித்தான் இருந்தார். எனினும், அவரே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் உச்ச தலைவராக வலம் வந்தார். புரட்சிக்குப் பின்னரும் கூட ஈரான் அமைதியாக இல்லை. அண்டை நாடான ஈராக் உடன் 1980 முதல் 88 வரை போர் செய்தது. அதை புனிதப் போர் என்று அழைத்தது.

ஈரானை எத்தகைய போர் சூழல் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது காமேனியின் நிலையான குறிக்கோளாக இருந்தது. அதனைச் சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் கட்டமைக்கப்பட்டன. இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் காமேனிக்கு நாட்டின் அரசு, நீதித்துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் இருந்தது. இந்த ஏகபோக அதிகாரம்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், இளைஞர்களும் கருதினர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸின் புகலிடமாக உள்ள காசா மீது இஸ்ரேல் தரப்பு தாக்குதல் தொடுத்தது. அதில் காசா மக்கள் உயிரையும், உடமைகளையும் இழந்தனர். இஸ்ரேலின் இந்த செயலை இனப்படுகொலை என காமேனி பேசினார். அதேநேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இதர பிராந்திய ரீதியான பயங்கரவாத படைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்தச் சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றார் டொனல்டு ட்ரம்ப். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைத்து கொண்டது. அப்போது ஈரானின் ராணுவ தளங்களும் குறிவைக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். காமேனியின் மரணத்தை, ஈரான் மக்களில் ஒரு தரப்பினர் பெரும் சோகத்துடன், இன்னொரு தரப்பினர் கொண்டாட்டத்துடனும் அணுகுவதும் கவனிக்கத்தக்கது.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி, அதாவது காமேனி கொல்லப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அவர் ஆற்றிய கடைசிப் பொது உரை தற்போது உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது. ஈரான் புரட்சி வரலாற்றையும், தற்போதைய பதற்றமான சூழலையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்த அந்த உரையில் காமேனி, “அமெரிக்கா என்பது உண்மையிலேயே சிதைந்து வரும் ஓர் அமைப்பு. அது வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சாம்ராஜ்ஜியம்.

ஈரானின் தற்காப்புத் திறன்கள் மற்றும் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அளிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற அழுத்தங்களையும் ஈரான் ஒருபோதும் ஏற்காது. அமெரிக்காவுக்கும் நமக்கும் உள்ள மிகப் பெரிய சிக்கலே, ஈரானை அவர்கள் விழுங்க துடிக்கிறார்கள் என்பதுதான். ஆனால் ஈரானிய தேசம் அதைத் தடுத்து நிறுத்துகிறது. இஸ்லாமியக் குடியரசு அவர்களின் பாதையில் முட்டுக்கட்டையாக நிற்கிறது. ஈரானை ஒழிக்க நினைக்கும் அமெரிக்காவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. ஈரானில் சமீபத்தில் இளைஞர்கள் கோபத்தில் திரண்டது போன்ற நிகழ்வு சாதாரணமான ஒன்றல்ல; அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளால் திட்டமிடப்பட்ட ஒரு சதித் திட்டம்.

ராணுவ மற்றும் அரசு நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தச் சதியை, ஈரானிய தேசம் தனது காலடியில் போட்டு நசுக்கிவிட்டது. பாதுகாப்புப் படைகளும் பொதுமக்களும் இணைந்து நாட்டின் முக்கிய நிறுவனங்களைக் காத்துள்ளனர்” என்று காமேனி பெருமிதத்துடன் அந்த உரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவுகளில், “உலக வரலாற்​றின் தீய மனிதர்​களில் ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி​யும் ஒரு​வர். அவர் உயி​ரிழந்​து​விட்​டார். இதன்​மூலம் ஈரான் மக்​களுக்கு முழு​மை​யான நீதி கிடைத்​திருக்கிறது. காமேனி​யால் பாதிக்​கப்​பட்ட நாடு​கள் மற்​றும் அமெரிக்க மக்​களுக்​கும் நீதி கிடைத்​திருக்​கிறது” என்று ட்ரம்ப் கூறியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

யார் இந்த அயத்துல்லா அலி காமேனி? - எழுச்சியும் வீழ்ச்சியும்!
காமேனி மரணமும் தாக்கமும்: ஈரானில் ஒருபக்கம் துக்கம், மறுபக்கம் கொண்டாட்டம் ஏன்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in