‘வாட்ஸ்ஆப்’பில் ‘யூசர்நேம்’ ஏன்? - மத்திய அரசின் கேள்வியும், மெட்டா விளக்கமும்
வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல், அதற்கு மாற்றாக யூசர்நேம் எனப்படும் பயனர் பெயரை பயன்படுத்தும் வகையிலான அம்சம் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ் ஆப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் சார்ந்து பயனர்கள் தங்களுக்கு தேவையான பயனர் பெயரை பதிவு செய்யும் வசதியை வாட்ஸ் அப் இந்தியாவில் தொடங்கி உள்ளது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பயன்பாட்டில் உள்ள யூஸர் நேமையும் பயனர்கள் இதில் தேர்வு செய்ய முடியும்.
அதன் தொடர்ச்சியாக, வாட்ஸ் ஆப்பில் மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்ட அபாயங்களை சுட்டிக்காட்டி மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்காக கொண்டுவரப்பட்ட யூசர்நேம் அம்சம் அமல்படுத்துவதை, ஆலோசனைகள் முடியும் வரை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரத்தை இப்போது பார்ப்போம்.
‘யூசர்நேம் அம்சம் மூலம் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களைப் பகிர்ந்து கொள்ளாமலேயே தனித்துவமான பயனர் பெயர்களை உருவாக்கி வாட்ஸ் ஆப்பில் இணையலாம். பயனர் பெயர்கள் கட்டாயமில்லை, அவற்றை அறிமுகமில்லாதவர்கள் தேட முடியாது, பயனர்கள் கூடுதலாக ஒரு ‘பயனர் பெயர் கடவுச் சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் ஆகிய இரண்டும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் மெட்டா நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட பெயர்கள் முன்பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. அதனால் அவற்றை உண்மையான உரிமையாளர்கள் மட்டுமே பெற முடியும். மோசடி செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ‘பிளாக்' மற்றும் 'ரிப்போர்ட்' போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. பயனர் பெயர் கட்டாயம் இல்லை.
ஒரு பொதுவான பெயரை யாராவது ஏற்கெனவே பெற்றிருந்தால், ‘யூசர்நேம் ஜெனரேட்டர்'-ஐப் பயன்படுத்தவும். வாட்ஸ்அப்பில் உங்களால் ஒரு தொலைபேசி எண்ணைத் தேட முடியாதது போலவே, ஒரு பயனர் பெயரையும் தேட முடியாது. உங்களை யாரும் தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, ஒரு பயனர் பெயர் கடவுச் சொல்லை சேர்ப்பதும் வாட்ஸ் ஆப்பிற்கு மட்டுமேயான ஒரு தனித்துவமான பயனர் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் ஆகும்.
கடவுச் சொல் உங்கள் பயனர் பெயருடன் நீங்கள் ஆன் செய்து கொள்ளக்கூடிய கூடுதல் பாதுகாப்பு அடுக்கு ஆகும். உங்கள் பயனர் பெயர் மூலம் வரும் புதிய தொடர்புகளை நிறுத்த, எந்த நேரத்திலும் உங்கள் கடவுச் சொல்லை நீங்கள் மாற்றி கொள்ளலாம்.
அறிமுகமில்லாத நபர்கள் பற்றிய விவரங்களுடன் கூடிய எச்சரிக்கைகள், அதாவது அவர்கள் புதிய கணக்கா, நீங்கள் ஒரே குழுக்களில் இருக்கிறீர்களா, அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் போன்ற விவரங்கள் மற்றும் பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்ட தேவையற்ற தொடர்புகளைத் தடுப்பதற்கான தற்போதைய அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.