வெள்ளை மாளிகை செய்த ‘திருத்தம்’ என்ன? @ இந்தியா - யுஎஸ் வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவை அமெரிக்காவிடம் மோடி அரசு விற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. ஆனால் 24 மணி நேரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில அம்சங்களை அமெரிக்கா திருத்தி உள்ளது. இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடுதல் சலுகைகள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இந்தியாவின் வேண்டுகோள்படி சில முக்கிய மாற்றங்களை வர்த்தக ஒப்பந்தத்தில் செய்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்டபின்பு இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
பருப்பு உற்பத்தியில் இந்தியா உலகளவில் பெரிய நாடாக உள்ளது. உலகளாவிய பருப்பு உற்பத்தியில் இந்தியா 25 முதல் 28 சதவீத இடத்தை பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க பருப்புகள் மீது இந்தியா விதிக்கும் 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க வற்புறுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அமெரிக்கா முதலில் வெளியிட்ட வர்த்தக ஒப்பந்த விவரத்தில் பருப்புகள் மற்றும் அமெரிக்க வேளாண் பொருட்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா மாற்றியமைத்து வெளியிட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் பருப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவிடம் இருந்து 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் அளவிலான எரிசக்தி பொருட்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப பொருட்கள், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் சேவைகளை பெற இந்தியா உறுதி அளித்துள்ளதாக முதலில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் மாற்றி அமைக்கப்பட்ட ஒப்பந்தத்தில் வேளாண் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. உறுதி அளித்துள்ளது என்ற வார்த்தைக்கு பதிலாக உத்தேசித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.