விலை குறையும், விலை உயரும் பொருட்கள் எவை? - மத்திய பட்ஜெட் 2026 அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

தனி நபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை. புதிய வருமான வரி சட்டம், 2025, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எளிமையாக்கப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும்.

எதிர்கால சாதனையாளர்களை உருவாக்க, 10,000 கோடி ரூபாயில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி நிதி அமைப்பு உருவாக்கப்படுகிறது. காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் சீர்திருத்தம் கொண்டுவர மகாத்மா காந்தி கிராம சுவராஜ் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க ‘தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்’ கொண்டுவரப்படுகிறது. முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியை 2030-ம் ஆண்டுக்குள் அதிகரிக்க பிரத்யேகத் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

உயர்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் அதாவது, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதப் படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய மகளிர் விடுதிகளை மத்திய அரசு அமைக்கும். நாடு முழுவதும் பெண் குழந்தைகள் கல்வி கற்க இதுபோல் 700 மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக, 17 மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. கனிம வளங்கள் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் சுரங்கம், ஆய்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. ஆயுஷ் துறை மூலம் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மற்றும் லோத்தல், தோல்வாரா, ரத்னகிரி, சாரநாத், அஸ்தினாபுரம், லே உள்ளிட்ட 15 அகழ்வாராய்ச்சித் தலங்கள் மேம்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த சுயதொழில் முனைவோருக்காக சிறப்பு அங்காடிகள் உருவாக்கப்படுகிறது. இனி, இந்த பட்ஜெட் தாக்கத்தால் விலை குறையும், உயரும் பொருட்கள் எவையென பார்ப்போம்.

புற்றுநோய் மருந்துகள், காலணிகள், ஸ்மார்ட்போன்கள், தோல் பொருட்கள், சோலார் பேனல்கள், மைக்ரோ ஓவன், டிவி உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், கடல் உணவுகள், மின்சார வாகன பாகங்கள், விமான உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.

அதேவேளையில் ஆல்கஹால், ஆடம்பர கைக்கடிகாரங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள், காபி, குடைகள், இரும்பு, நிலக்கரி, உப்பு ஆகியவற்றின் விலை உயரும்.

விலை குறையும், விலை உயரும் பொருட்கள் எவை? - மத்திய பட்ஜெட் 2026 அம்சங்கள்
தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in