மின்னல் தாக்குதல் அதிகரிப்பது ஏன்?

மின்னல் என்பது மேகங்​களுக்கு இடையே நிகழ்​கின்ற அல்லது இரண்டு மேகங்​களுக்கும் தரைக்கும் இடையே நிகழ்​கின்ற உடனடி மின்னிறக்கம், அதாவது Electrical Discharge ஆகும். தற்போது மின்னல் தாக்குதல் அதிகரித்​திருப்​ப​தற்குக் காலநிலை மாற்றமே காரணம் என்கிறது மத்திய புவி அறி​வியல் அமைச்​சகம். வெப்பச்​சலனம் அல்லது இடி, மின்னல் மேக உருவாக்​கத்​துக்குக் காலநிலை மாற்றம் காரணமாக உள்ளதாக​வும், அதனால் காற்றில் ஈரப்ப​தத்தைத் தக்கவைத்​துக்​கொள்ளும் திறன் அதிகமாவ​தாகவும் கூறப்​படு​கிறது. தரையின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்​கிற​போது, காற்று இலகுவாக இருந்தால் அது மேலும் உயரும்.

அதிக வெப்பநிலை​யானது இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பை அதிகப்​படுத்தும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

புவி வெப்ப​மாதலுக்கு அடுத்​த​படியாக நகரமய​மாக்கம், காடழிப்பு, நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு, அதாவது urban heat island effect, தூசிப்​படலம் அதிகரிப்பு உள்ளிட்டவை மின்னல் தாக்குதலை அதிகப்​படுத்து​வ​தாகக் கண்டறியப்​பட்​டுள்ளது.

கிராமப்பு​றங்​களைக் காட்டிலும் நகரப்​பகு​திகள் அதிக வெப்ப​மானதாக உள்ளன. கான்கிரீட் கட்டிடங்கள் அதிகமாக வெப்பத்தை தக்கவைத்​துக்​கொள்​கின்றன. அதிகமான, செறிவுமிக்க தூசிப்​படலத்தால் காற்று மாசு அதிகரித்து, அதன் விளைவாக மழைத்​துளியின் அளவு குறைகிறது. இதனால் மேகத்​திரளில் இருக்கும் பனிக்​கட்​டிகளின் எண்ணிக்கை அதிகமாகி, அவற்றுக்கு இடையேயான மின்கடத்​தும்​ திறன் அதிகமாகிறது. இது, மின்னல் தாக்குதலுக்கான சாத்தி​யத்தையும் தீவிரத்தையும் அதிகப்​படுத்து​கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் ‘தாமினி’ செயலி​யானது 40 நிமிடங்​களுக்கு முன்னதாக ‘மின்னல்’ எச்சரிக்கையை விடுக்​கிறது. தமிழக அரசின் TNSMART இணையதளம், TN-ALERT செயலிகள் இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கு​கின்றன.

பனைமரங்கள் நடுவது, முன்னெச்​சரிக்கை அமைப்பு​களுடன் ஸ்மார்ட் கம்பங்களை அமைப்பது, அதிக அபாயம் உள்ள பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது உள்பட அறிவியல்​பூர்வமான கண்காணிப்பும், தரவுத் துல்லி​யத்​தன்மை அதிகரிப்பும் அவசியம். அதுபோலவே, தொழில்​நுட்ப மேம்பாட்டுக்கும் கீழ்மட்ட அளவிலான செயல்​படுத்​துதலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்தாக வேண்டும். இவற்றோடு மின்னல்​ தடுப்பு கட்டமைப்பில் அதிக முதலீட்டை ஈர்த்தாக வேண்டிய கடமை அரசுகளுக்கு உள்ளது. காலநிலை மாற்றங்களைத் தூண்டுகிற மனிதச் செயல்​பாடுகளை நிறுத்துவது மிக மிக முக்கியம்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in