எப்படி இருக்கிறது பொருநை அருங்காட்சியகம்?
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக் காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகத்தை அரசு அமைத்துள்ளது. திருநெல்வேலி ரெட்டியார்பட்டி பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம்.
திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பை கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக சட்டப்பேரவைில் 110- விதியின்கீழ் தமிழக முதல்வர் வெளியிட்டிருந்தார். இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு மே18-ம் தேதி 67 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கி நடைபெற்றன.
தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப் பண்பாட்டின் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின் துறைமுகமான கொற்கை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்த பொருநை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் அறிமுகக் கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டிட தொகுதிகள் 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிட தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் முகப்புகளிலும் உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.
இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம், நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றையும், சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளின் முக்கியத்துவத்தையும் உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில், 15 நிமிட ஒளி-ஒலி காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது.
5,300 ஆண்டுகளுக்கு முன்னரே, உலையில் இட்டு இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றியது என்பது அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை விளக்கும் வகையில் இரும்பு உருக்குதல் செயல்முறை நேரடிக் காட்சி மற்றும் மாதிரி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் குறியீடுகள், பண்பாட்டுக்கூறுகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சிகள் ஆகியவை ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன. கொற்கை துறைமுகத்தில் கடல்வழி வணிகம் சிறப்புற்றிருந்தது. அயல்நாட்டு வணிகர்களுடன் தமிழர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி – இறக்குமதி வணிகத்தின் சிறப்பை கண்முன்னே கொண்டு வரும்வகையில் இரண்டு கலன்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் நிலங்களின் தனிச்சிறப்பை உணர்வு பூர்வமாக அனுபவிக்கச் செய்யும் ஓர் பயணமாக, ஐந்திணைகள் 5D வடிவில் பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகங்கள் சேகரிப்பிலிருந்து அலெக்ஸாண்டர் ரீ என்பவரால் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கற்கருவிகள், சங்கினாலான பொருட்கள் தயாரித்தல், இரும்பு உருக்குதல் போன்ற அறிவியல் – தொழில்நுட்ப முறைகளும், நீர் மேலாண்மை, வணிகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.