குறையும் தங்கம் விலை... நகைக் கடன் வாங்கியோருக்கு சிக்கல்!
கடந்த ஓராண்டாக யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த தங்கம் விலை, தற்போது திடீரெனப் பாதாளத்தை நோக்கிச் சரியத் தொடங்கியுள்ளது. சர்வதேசப் பொருளாதார மாற்றங்களால், ஆபரணத் தங்கத்தின் விலை வரும் மாதங்களில் கிராம் ரூபாய் 8,000 முதல் ரூபாய் 10,000 என்ற பழைய நிலைக்குக் கூட குறைய வாய்ப்புள்ளதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சென்னையில் நவம்பர் 25-ல் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூபாய் 295 குறைந்து ரூபாய் 11,420 ஆகவும், ஒரு பவுன் விலை ரூபாய் 2,360 குறைந்து ரூபாய் 91,360 ஆகவும் விற்பனை ஆனது. கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூபாய் 14 ஆயிரத்துக்கு மேலாக ஆபரணத் தங்கம் விலை குறைந்ததை கவனிக்க வேண்டும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 2023-க்குப் பிறகு மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வரும் டிசம்பரிலும் மீண்டும் வட்டி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் எந்த வட்டியையும் தராது என்பதால், வட்டி விகிதம் உயரும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு அமெரிக்க அரசுப் பத்திரங்களில் பணத்தைப் போடுகிறார்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதுவும் தங்கத்தின் விலையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்நிய முதலீட்டாளர்களின் வருகையால் இந்தியப் பங்குச் சந்தை எழுச்சி கண்டுள்ளது. இதனால் பாதுகாப்புப் புகலிடமாக தங்கத்தில் முடக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம், தற்போது மீண்டும் பங்குச் சந்தை நோக்கித் திரும்புவதால் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது. இத்தகைய காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருவது நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நகைகளை அடமானம் வைத்தவர்களுக்குப் பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை மட்டுமே நகைக்கடன் வழங்க முடியும். தங்கம் உச்சத்தில் இருந்தபோது அதிகபட்சத் தொகைக்கு நகைக்கடன் பெற்றவர்களின் நகை மதிப்பு, தற்போது விலை சரிவால் குறைந்துவிட்டது.
இதனால், கடன் தொகைக்கும் நகையின் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான விகிதம் அதிகரித்துள்ளதால், கூடுதல் நகைகளை அடமானம் வைக்குமாறோ அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியை உடனடியாகத் திரும்பச் செலுத்துமாறோ வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளன. இதைத் தவறினால் நகைகள் ஏலத்துக்குச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க, கடன் நகையின் தற்போதைய மதிப்பு இடைவெளியைச் சரிக்கட்ட வித்தியாசத் தொகையை மட்டும் கட்டலாம். இல்லையெனில் கூடுதல் நகையைக் கணக்கில் சேர்க்கலாம். முதலில் வங்கி நோட்டீஸைப் புறக்கணிக்காமல் கிளை மேலாளரைச் சந்தித்து, கணக்கைச் சீராக்கத் தேவையான சரியான தொகை மற்றும் அவகாசத்தைத் தெளிவாகப் பேசி புரிந்து கொள்வது அவசியம்.
அதேநேரம், நோட்டீஸுக்குப் பயந்து வெளியே கந்துவட்டி அல்லது அதிக வட்டி கொண்ட தனிநபர் கடனை வாங்கி அடைப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சேமிப்பு அல்லது குடும்பத்தினர் உதவியுடன் வித்தியாசத் தொகையைச் சரிக்கட்டுவதே புத்திசாலித்தனமான முடிவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக, நகைக்கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனிலும் வங்கிகள் தினமும் தொடர்பு கொள்வது தெரிய வருகிறது. இது குறித்து முன்னோடி வங்கி அலுவலக அலுவலர்களிடம் கேட்டபோது, ‘தங்கத்தின் விலை குறைவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து வித்தியாச தொகையையோ அல்லது கூடுதல் தங்கத்தையோ பெறுமாறு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எனினும், வங்கி நிர்வாகங்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடனை முழுமையாக செலுத்துமாறும் நிர்பந்திக்கவில்லை’ என்றனர்.