டிட்வா புயலும் சில படிப்பினைகளும்

காலநிலை மாற்றத்தின் விளைவுகள், வழக்கமான பருவமழைக் காலங்களில் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் பேரழிவுகள் இதைத்தான் காட்டுகின்றன.

குறிப்பாக, டிட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு, அந்நாட்டு மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தப் புயலால் தமிழ்நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், படிப்பினைகளைக் கற்றுத்தரத் தவறவில்லை. பேரழிவுத் தாக்கங்களை அதிகரிக்கும் அடிப்படைக் காரணிகளான காடழிப்பு, முறையற்ற நிலப் பயன்பாடு, போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது போன்றவற்றுக்குத் தீர்வுகாண வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.

மறுபுறம், இலங்கை அளவுக்குத் தமிழகத்தில் பெரிய அளவு பாதிப்பை டிட்வா புயல் ஏற்படுத்தவில்லை என்றாலும், ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்குக் கனமழைக்குக் காரணமாகியிருக்கிறது. சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு நாள்களாகப் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது.

இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்வதில் எல்லா நாடுகளிலும் போதாமைகள் தொடர்கின்றன. பிலிப்பைன்ஸில் பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்களை உருவாக்குவதில் ஊழல் நடந்திருப்பதால்தான், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பதாகக் கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இலங்கையில், வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கைகளை அரசு புறக்கணித்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்த காட்சிகளைப் பார்க்க முடிகிறது. திட்டவட்டமாகக் கணிக்க முடியாத வானிலை, மனிதக் குலத்துக்குப் பேரழிவுகளை ஏற்படுத்தவல்லது. இயற்கைப் பேரழிவுகள் தொடர்கதையாகிவிட்ட சூழலில் அவற்றை எந்த நேரத்திலும் எதிர்கொள்வதற்கான முன்தயாரிப்புகள் மிகவும் முக்கியம். பருவமழைக் காலத்துக்கு முன்பாகவே விரிவான திட்டங்களை அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்புடன் உருவாக்குவதன் மூலம் பாதிப்புகளை இயன்றவரை குறைக்க முடியும்!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in