இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா... வெள்ள பாதிப்பு நிலவரம் என்ன?
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிச.1 நிலவரப்படி டிட்வா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம், குடிநீர், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளன.
புயல் இலங்கை கடற்பரப்பிலிருந்து விலகி, தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்தாலும், இலங்கையின் பல மாவட்டங்கள் இன்னும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை, ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை மீட்கும் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் இருப்பதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் வெள்ள நீர் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.