ஆஸ்திரேலிய தாக்குதலும் யூத எதிர்ப்பு மனநிலையும் - ஒரு விரைவுப் பார்வை
ஆஸ்திரேலியாவில் யூத மதக் கொண்டாட்ட நிகழ்வின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகை அதிரவைத்திருக்கிறது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் யூத எதிர்ப்பு மனநிலை அதிகரிப்பதன் சாட்சியம் எனக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
1996-இல் டாஸ்மேனியா மாகாணத்தில் ஆர்தர் துறைமுகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை.
அதேவேளையில், அக்டோபர் 2023-இல் ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள ஜெப ஆலயங்கள், கட்டிடங்கள், கார்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் அங்கு யூத எதிர்ப்பு மனநிலை அதிகரித்து வருவதைக் காட்டுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.
யூத எதிர்ப்பைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் எதுவும் செய்யவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக விமர்சித்திருக்கிறார்.
ஆர்தர் துறைமுகத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி உரிமச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. அதன் பிறகும் இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ஆஸ்திரேலியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சாஜித்திடம் உரிமம் பெற்ற ஆறு துப்பாக்கிகள் இருந்ததாகவும், அவை அனைத்தும் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, துப்பாக்கி தொடர்பான சட்டங்களில் நிச்சயமாக மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் அல்பனீஸ், நியூ செளத் வேல்ஸ் தலைமை அமைச்சர் கிறிஸ் மின்ஸ் ஆகியோர் உறுதியளித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, காசா போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அமைதித் திட்டத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் மீறல்களில் ஈடுபட்டதாக இஸ்ரேலும் ஹமாஸும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன.
ஹமாஸ் தலைவர்களை அழித்தொழிக்கும் பணிகளை இஸ்ரேல் தொடர்கிறது. இத்தகைய சூழலில், யூத எதிர்ப்பு மனநிலையுடன் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களால் மீண்டும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
இத்தகைய நச்சுச்சூழல் வளர சர்வதேசச் சமூகம் அனுமதிக்கக் கூடாது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டால்தான் பயங்கரவாதச் செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.