திமுக முன்னாள் அமைச்சர் உறவினருக்கு சீட் கொடுக்க சிபாரிசு?- அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தலைமையிடம் புகார்

திமுக முன்னாள் அமைச்சர் உறவினருக்கு சீட் கொடுக்க சிபாரிசு?- அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தலைமையிடம் புகார்
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்த திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அண்ணன் மருமகளின் பெயரை தலைமைக்கு சிபாரிசு செய்திருப்பதாக அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு எதிராக தலைமைக்கு புகார் கடிதங்கள் எழுதியுள்ளனர் திண்டுக்கல் அதிமுக-வினர்.

திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தனது மருமகன் கண்ணனை நிறுத்த மெனக்கெடுகிறார். இதை தெரிந்துகொண்டு அவரது எதிரணி, ‘அமைச்சர், குடும்ப அரசியல் செய்கிறார்’ என விமர்சிக்கிறது. இதனால் மருமகனுக்கு வாய்ப்பு கைநழுவிப் போனால் அடுத்த சாய் ஸாக வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவர் சுசித்திரா பாண்டியனை முன்னிறுத்துகிறாராம் அமைச்சர். சுசித்திராவை சுற்றித்தான் இப்போது சர்ச்சை.

இதுகுறித்து `தி இந்து’விடம் பேசிய அதிமுகவி-னர் சிலர், ``திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஒன்று விட்ட அண்ணன் மருதன். இவரது மகன் எம்.வி.எம்.பாண்டியனுக்கு வத்தலகுண்டு ஒன்றியச் செயலாளர் பதவி கொடுத்தார் விசுவநாதன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், பாண்டியனின் மனைவி சுசித்திராவை வத்தலகுண்டு பேரூராட்சித் தலை வராகவும் ஆக்கினார். இப்போது அவரையே நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தவும் தலைமைக்கு பரிந்துரை செய்திருக்கிறார் விசுவநாதன்.

திமுக முன்னாள் அமைச்சரின் உறவுகளைப் பதவிக்கு கொண்டு வருவதற்கு அமைச்சர் இவ்வளவு மெனக்கெட்டால் நாங்கள் என்ன நினைப்பது? நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியான எத்தனையோ பேர் இருக்கையில் இப்படி ஒரே குடும்பத்துக்கே மீண்டும் மீண்டும் பதவிகளை வழங்க வேண்டிய அவசி யம் என்ன வந்தது? இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அம்மாவுக்கு ஃபேக்ஸ் அனுப்பி வருகிறோம்’’ என்றார்கள்.

அமைச்சர் விசுவநாதனின் ஆதர வாளர்களோ, ``சுசித்திராவின் பெயரை தலைமைக்கு அமைச்சர் சிபாரிசு செய்திருந்தாலும் அதில் தவறேதும் இல்லை. ஏனென்றால், ஐ.பெரியசாமியின் உறவுக்காரராக இருந்தாலும் எம்.வி.எம். பாண்டியனுக்கு அவர்களோடு எந்தத் தொடர்பும் கிடையாது. அப்படி இருக்கையில், அவரது மனைவிக்கு சீட்டுக்கு சிபாரிசு செஞ்சா என்னங்க தப்பு?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in