‘சிறை’ ஏன் முக்கிய படைப்பு? - திரைப் பார்வை
‘டாணாக்காரன்’ திரைப்படத்தின் மூலம் காவல்துறை பயிற்சியில் நடக்கும் அநீதிகளைத் தோலுரித்துக் காட்டிய இயக்குநர் தமிழ், தற்போது கதாசிரியராக தனது முத்திரையை மீண்டும் ஆழமான பதித்திருக்கும் படம் ‘சிறை’. சிறுபான்மையினரின் போராட்டங்களையும், அதிகார வர்க்கத்தின் பாரபட்சமான போக்கையும் பேசியிருக்கிறது இப்படம்.
ஒரு படம் தொடங்கிய 15-வது நிமிடத்திலேயே அது தேறுமா இல்லையா என்பதை சொல்லிவிடமுடியும். அந்த வகையில் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து யார் இவர் என்று கவனிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. காவல் துறையை பற்றிய நுணுக்கமான விஷயங்களை ஆடியன்ஸுக்கு எளிதில் புரியும் வகையில் பேசிய படங்கள் மிகக் குறைவு. ‘விசாரணை’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் வரிசையில் ‘சிறை’யும் இடம்பிடிக்கிறது.
கீழ்நிலை காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிக்கலான நடைமுறைகளை பேசிய விதம், இடையே மெல்லியதாக வரும் விக்ரம் பிரபு - அவர் மனைவி இடையிலான காதல், அப்துல் ரவூஃப் கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை சீட் நுனிக்கு கொண்டு வரும் வகையில் விறுவிறுப்பாக சொன்னது என இயக்குநரும், திரைக்கதை ஆசிரியர் தமிழும் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கின்றனர்.
மிக முக்கியமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரச்சார நெடியின்றி இப்படம் பேசியிருக்கும் விதம் வெகுவாக பாரட்டத்தக்கது.
குறிப்பாக ஒரு காட்சியில் மூணாறு ரமேஷ் பேசும் வசனத்துக்கு அரங்கம் அதிர்கிறது. சமீபகாலங்களில் வெளியான மிக முக்கியமான காட்சி அது. விக்ரம் பிரபு அண்மைக்காலமாக கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் காட்டும் நிதானம் இப்படத்திலும் தெரிகிறது. காவல் நிலையக் காட்சிகளிலும், நீதிமன்றக் காட்சிகளிலும் அவரது நடிப்பு பாராட்டுக்குரியது. படத்தின் பலங்களில் ஒன்றும் அதுவே.
'டாணாக்காரன்' படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபுவின் திரைப் பயணத்தில் இது மற்றொரு முக்கியமான மைல்கல். அனிஷ்மா மற்றும் அக்ஷய் குமார் இருவருமே நடிப்பில் மிளிர்கின்றனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு காவல் நிலையங்களின் இறுக்கமான சூழலை தத்ரூபமாகப் படம்பிடித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரின் பாடல்கள் பெரியளவில் கவரவில்லை என்றாலும் கூட பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
சிறுபான்மையினர் சந்திக்கும் பாகுபாடுகள் மற்றும் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகள் ஆகியவற்றை எந்தவிதமான மிகைப்படுத்தலும் இன்றி திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். படம் முழுக்க நெகிழ வைக்கும் உணர்வுபூர்வ தருணங்கள் ஏராளம் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் விளிம்புநிலை மக்கள் எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. படத்தின் மிகப் பெரிய பலம், அதன் திரைக்கதை மற்றும் வசனங்கள்.
வணிக ரீதியான சமரசங்கள் எதையும் செய்துகொள்ளாமல், ஒரு நேர்மையான கதையைச் சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியும், கதாசிரியர் தமிழும் வெற்றி பெற்றுள்ளனர். சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை விரும்புபவர்கள் மட்டுமின்றி, விறுவிறுப்பான த்ரில்லர் களத்தை எதிர்பார்ப்பவர்களும் அவசியம் பார்க்கலாம். அதிகாரத்திற்கு எதிரான அமைதியான, அதேசமயம் வலிமையான போராட்டமே இந்த 'சிறை'.