அவதார் 3 - திரை விமர்சனம் | பிரமாண்டமா, பரிதாபமா?

முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், இந்த மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது.

ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது.

மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்துகொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் திரைக்கதை.

வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பசுமைக் காடு மற்றும் நீலக் கடல் நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால், இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன.

ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் VFX துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3D-யில் பார்ப்பது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன.

பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை.

படத்தின் நீளம் மிகப் பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. கற்பனையாற்றல் சரக்கு தீர்ந்து போனதைப் போல, காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.

2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே.

மொத்தத்தில், அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஓர் உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’.

அவதார் 3 -  திரை விமர்சனம் | பிரமாண்டமா, பரிதாபமா?
SIR-க்குப் பின் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in