
“தில்லாக, நேர்மையாக, கெத்தாக தேர்தலை சந்திக்கலாம் வாருங்கள்... நீங்களா, நானா என்று பார்த்து விடுவோம்” என்று நாகை பிரச்சாரத்தில் திமுகவுக்கு தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் சவால் விடுத்துப் பேசினார். அவர் பேசியதன் விவரம்:
“நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கடை மாரியம்மன் அன்னை வேளாங்கண்ணி ஆசியுடன், கடல் தாய் மடியில் இருக்கிற என் மனதில் மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் நின்று பேசுகிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் மீனவ நண்பனாக இருக்கும் இந்த விஜயின் அன்பு வணக்கங்கள்
கப்பலில் வந்து இறங்குகிற பொருட்களை எல்லாம் விற்கிற பொருள்களை எல்லாம் அந்திக் கடையில் நாகையில் இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். மீன்பிடித்தவர்கள், மற்ற தொழில்கள், விவசாயம் என்று எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கிற ஊர் இந்த நாகை.
மத வேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்கின்ற உங்கள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய சிறந்த ஸ்பெஷல் வணக்கம்.
இந்த தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது நம்ம நாகை. ஆனால் நவீன வசதியுடன் மீன் பதப்படுத்துகிற மாடர்ன் தொழிற்சாலைகள் இல்லை. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் இல்லாமல் குடிசைகள் இருக்கும் ஊர் இது.
இந்த முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி என்று அடுக்குமொழியில் பேசிப் பேசி அதை நாம கேட்டு கேட்டு காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவங்க ஆண்டது பத்தாதா மக்கள் தவியாக தவிக்கிறார்கள் இது பத்தாதா?
இலங்கை கடற்படையால் நம்ம மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணத்தைப் பற்றியும், தீர்வை பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருக்கிறேன். அது ஒரு தப்பா?
மீனவர்களுக்காக குரல் கொடுப்பது நம்முடைய கடமை உரிமை. நான் இன்றைக்கா அவர்களுக்கு குரல் கொடுக்கிறேன். இதே நாகையில் 14 வருடங்களுக்கு முன்பு 2011 பிப்ரவரி 22-ம் தேதியன்று மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதில்லை கண்ணா எப்பவோ வந்தாச்சு.
என்ன ஒன்று முன்பெல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்ற இயக்கமாக வந்தோம். இப்போ தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம் அதுதான் வித்தியாசம்.
அன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி, மக்களோடு மக்களாக விஜய் நிற்பான். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் இதே சமயத்தில் நம்ம தொப்புள் கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்கள். அவர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவர்களுக்காகவும் நிற்பது நம்முடைய கடமை.
மீனவர்களுடைய உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல இலங்கை தமிழருடைய வாழ்வும் நமக்கு முக்கியம். மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் ஒரு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று போவதற்கு நான் கபட நாடக திமுக கிடையாது.
மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள் நம்ப மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள். இப்படி பிரித்துப் பார்த்து பேச நாம் ஒன்றும் பாசிச பாஜக அரசு கிடையாது. இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு இதை தேர்வு காண்பதுதான் நமது முக்கியமான அஜெண்டா.
இங்கிருக்கும் மண் வளத்தை பாதிக்கும் இரால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். கரையோர கிராமங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அலையாத்தி காடுகள் அழிவதை தடுத்து நிறுத்தி அதை வளர்க்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆனால், சொந்த குடும்பத்தினுடைய வளர்ச்சியும் சொந்த குடும்பத்தோட சுயநலமும் தான் இவர்களுக்கு முக்கியமான வேலை. இங்கிருக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் அதற்கு பதிலாக காவிரி தண்ணீரை கொண்டு வரலாம் கொண்டு வந்தார்களா.
பாரம்பரிய கடல் சார்ந்த ஊரில் அரசு மறைன் காலேஜ் கொண்டு வரலாம். கொண்டு வந்தார்களா. மீன் சம்பந்தமான எந்த தொழிற்சாலையும் அமைத்தார்களா? நிறைய பேருக்கு வேலைவாய்ப்பை தருகிற தொழில் வாய்ப்பை பெருக்கினார்களா? இல்லை.
ஆனால், ஒவ்வொரு தடவையும் வெளிநாட்டுக்கு டூர் போய்விட்டு வரும் போதெல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்று சிஎம் சிரித்துக்கொண்டே சொல்வார். சிஎம் சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலிடா இல்லை, வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு முதலிடா? இல்லை, உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா?
வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என்று இங்கிருக்கும் சுற்றுலாத்தலங்கள் எல்லாம் நல்லா டெவலப் செய்யலாம், குறைந்தா போய்விடுவீர்கள். வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கு வசதி ஏற்படுத்தி தரலாம் செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லையாம்.
நாகை புதிய பேருந்து நிலையத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்திருக்கிறார்களா? நாகை ரயில்வே ஸ்டேஷன் வேலையை சீக்கிரமாக முடித்தார்களா. இங்கே ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில்லையும், ரயில் பெட்டி தொழிற்சாலையில் மறுபடியும் மூடிவிட்டார்கள் மறுபடியும் திறக்க வேண்டும்.
தஞ்சாவூர் நாகப்பட்டினம் ரோடு பல வருடமாக நடக்கிறது. வேலையை முடித்திருக்கலாம், செய்தார்களா? நெல் மூட்டைகள் மழைக்காலத்தில் நனைகிறது.அதற்கு சரியான கிடங்கு கட்டி தரலாம். தந்தார்களா? தேர்தலுக்கு முன்பு திமுககாரர்கள் வந்து செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே, செய்தார்களா? எதையுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் செய்த மாதிரியே சொல்கிறார்கள்.
நான் போன வாரம் திருச்சி, அரியலூர் மாவட்டத்திற்கு மக்களை சந்திக்க சென்றிருந்தேன். பெரம்பலூர் போக வேண்டியது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சீக்கிரமாகவே உங்களை தேடி வருகிறேன். அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை மக்கள் சந்திப்பு என்று கேட்கிறார்கள்.
உங்க எல்லாரையும் வந்து பார்க்கும்போது எந்தவிதமான தொந்தரவும் உங்களுக்கு இருக்கக் கூடாது, முக்கியமாக உங்களுடைய வேலைக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்கக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக தான் வார இறுதி நாளாக பார்த்து பயணத்திட்டத்தை திட்டமிட்டுள்ளோம். விடுமுறை நாளில், ஓய்வு நாளில் வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அது மட்டும் இல்ல அரசியலில் சில பேருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா... அதனால்தான்.
மக்களை சந்திப்பதற்கு எவ்வளவு கட்டுப்பாடுகள், அந்த இடத்தில் அனுமதி இல்லை, இந்த இடத்தில் அனுமதி இல்லை என்றார்கள் அதற்கான காரணங்கள் மிகவும் சொத்தையாக இருக்கிறது. அங்கே பேசக்கூடாது, இங்கே பேசக்கூடாது ஐந்து நிமிடம் தான் பேச வேண்டும், பத்து நிமிஷம் தான் பேச வேண்டும். அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்கிறார்கள்.
அரியலூர் போகும்போது அங்க ஏரியாவில் பவர் கட். அப்புறம் திருச்சியில் பேச ஆரம்பித்ததுக்கு அப்புறம் ஸ்பீக்கருக்கு போற ஒயர் கட், இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் சிஎம் சார், ஒரு ஆர். எஸ். எஸ் தலைவர் அல்லது பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் வருகிறார் என்றால் இந்த மாதிரி கண்டிஷன் எல்லாம் போடுவீர்களா? இந்த மாதிரி பவர் கட் செய்வீர்களா? இந்த மாதிரி வயர் கட் செய்வீர்களா? கொஞ்சம் கட் பண்ணி தான் பாருங்களேன் முடியாதுல்ல, பேஸ்மெண்ட் அதிரும்
. நீங்கள் தான் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே. இதாவது பரவாயில்லை பஸ்க்குள்ளே இருக்கணும் என்று நிபந்தனை போட்டு இருக்கிறார்கள் பஸ்ஸை விட்டு வெளியே வரக்கூடாது இவ்வளவுதான் கையை தூக்க வேண்டும். அப்படி வந்தால் மக்கள் பார்த்து சிரிக்க மாட்டார்களா. அய்யய்யோ நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன் செம காமெடியாக இருக்கிறது.
நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார். மிரட்டி பார்க்கிறீர்களா அதுக்கு இந்த விஜய் ஆளில்லை. அதுக்கு நான் ஆள் இல்லை. என்ன செய்து விடுவீர்கள் அதிகபட்சமாக? கொள்கையை பேருக்கு வைத்துக்கொண்டு குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
நாங்கள் என்ன பெரிதாக கேட்டு விட்டோம்?, மக்களை வந்து பார்ப்பதற்கு ஒரு இடம், தேர்வு செய்து அனுமதி கேட்கிறோம். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அந்த இடத்தை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் நெருக்கடியாக எங்கு நிற்பார்களோ அந்த இடத்தை தருகிறீர்கள். உங்கள் எண்ணம் தான் என்ன? நான் மக்களை பார்க்க கூடாது, அவர்களிடம் பேசக்கூடாது, அவர்கள் குறைகளை கேட்கக்கூடாது, அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது என்பதுதான் உங்கள் எண்ணமா?
ஒரு அரசியல் தலைவர் என்பதை மறந்து விடுங்கள், ஒரு சாதாரண, தமிழ்நாட்டு மகனாக என் குடும்பத்தை என் சொந்தத்தை நான் பார்க்க போனால் என்ன செய்வீர்கள்? அப்பவும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார் இந்த அடக்குமுறை, இந்த அராஜகம், இந்த அரசியல் வேண்டாம், நாங்க தனி ஆள் இல்லை மாபெரும் மக்கள் சக்தியுடைய பிரதிநிதி. மாபெரும் கட்சியினுடைய சகோதரன் மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம்.
மறுபடியும் சொல்கிறேன் 2026 ல் இரண்டே இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. ஒன்று திமுக இன்னொன்று தமிழக வெற்றி கழகம். இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா எலக்சனை சந்திக்க வாருங்கள் சார் பார்த்துவிடலாம் . நீங்களா? இல்லை தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஒருவனாக இருக்கிற இந்த விஜய்யா பார்த்து விடலாம். இனிமேலும் இந்த தடைகளை எல்லாம் போட்டீர்கள் என்றால் நான் மக்களிடையே நேரடியாக பர்மிஷன் கேட்டு விடுவேன்.
இப்படி தடையாக போடுகிறார்களே இந்த திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நல்லதுக்காக நம்ம, உங்களுடைய தமிழக வெற்றி கழக ஆட்சி அமையணுமா?
சத்தமாக சொல்லுங்கள்... கேட்டுச்சா சி. எம்.சார். ஆசையாக பாசமாக கூப்பிட்டால் தான் பிடிக்க மாட்டேங்குது . இந்த இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது துரத்திக் கொண்டே வரும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசினார்.