
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் இன்று (மார்ச் 7) இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து தவெக-வைச் சேர்ந்த 3000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, இன்று ஒருநாள் முழுவதும் விஜய் விரதம் இருந்து, மாலை நடந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நோன்பு திறந்தார்.
சிறப்புத் தொழுகையில் விஜய் கலந்துகொண்டு, பிரார்த்தனை மேற்கொண்டார். நோன்பு திறப்பவர்களுக்கு தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் லுங்கி அணிந்து வந்திருந்தார். தொழுகையின்போது, இஸ்லாமியர்களைப் போல் தலையில் குல்லா அணிந்து தொழுகை செய்தார்.
தொழுகை முடிந்து, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேசும்போது, “என் நெஞ்சில் குடியிருக்கும், எனது அன்பான இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்” என்று தொடங்கினார்.
“மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றி வரும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்கள், என்னுடைய அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டு நீங்கள் அனைவரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1,500 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 3000-க்கும் அதிகமானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 2 மணி முதல் வர தொடங்கியவர்கள், 5 மணிக்குப் பிறகே அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர்.
தொழுகை முடிந்து வெளியே வந்த விஜய், திறந்த வேனில் ஏறி நின்று, அங்கு கூடியிருந்தவர்களுக்கு கைகளை அசைத்துக் காட்டியும், இதயம் போல கைகளை குவித்துக் காட்டியும் தனது அன்பை வெளிப்படுத்தினார்.