மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தி டெல்லி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீஸார் கலைத்தனர். | படங்கள்: சுஷில் குமார் வர்மா
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
உரிமம் பெற்றவர்கள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. பின்னர், அந்த கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது. எனினும், இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடந்த பிப்.26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், பிஆர்எஸ்கட்சியின் மேலவை உறுப்பினருமான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அவரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது.
பின்னர், இந்த வழக்கில் ஏப்.16-ம் தேதி காலை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், டெல்லி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட பாஜகவினர், அரவிந்த் கேஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக, சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து போலீஸார் நிறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பு வேலிகளைத் தாண்டி முன்னேற முயன்றதால், போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.
இருப்பினும், ஒருசில பாஜக தொண்டர்கள் முன்னேறிச் செல்ல முயன்றதால், டெல்லி சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.