
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல் துறை தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதற்கிடையே, கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.15 மணிக்குதான் பிரச்சார இடத்துக்கு விஜய் வர முடிந்தது.
அங்கு விஜய் பேச ஆரம்பித்தபோது, அவரது மைக் வேலை செய்யவில்லை. அவரது பேச்சைக் கேட்பதற்காக பின்னால் இருப்பவர்கள் நெருங்கியடித்தபடி பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்தனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்கினர்.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். மேலும், அப்பகுதியில் இருந்த மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். விஜய் பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேர், தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் என மொத்தம் 111 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளோரின் குடும்பத்தினரும், உறவினர்களும் மருத்துவக் கல்லூரி முன்பு குழுமினர். அவர்கள் கதறி அழுது துடித்ததால் அப்பகுதி முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்கியதாக தகவல் தெரியவந்ததும், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்ட விஜய், அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டார். கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விஜயிடம் செய்தியாளர்கள், “கரூரில் உங்கள் பிரச்சாரத்துக்கு வந்தவர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்களே?” என கேட்டபோது, எந்தக் கருத்தும் கூறாமல், தலையைக் குனிந்தபடி சென்றார்.
கரூர் சம்பவம் குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டோரை மீட்கவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, 50-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டன. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்தபடி செந்தில் பாலாஜி தீவிரப்படுத்தினார்.
அதிகாலை 3 மணியளவில் பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இல்லை. இனிமேல் இது நடக்கக் கூடாது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினேன். இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன்.” என்றார்
மேலும், “அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் சொல்லும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
அதேபோல், “கேட்ட இடத்தை தரவில்லை, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறதே..?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை.
கரூர் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், “திருச்சி, திருவாரூர் நாகைக்கு வந்த கூட்டத்தை மனதில் வைத்துதான் தவெகவினர் கேட்டதை விட பெரிய இடமாக இருக்கும் என்றுதான் இந்த இடத்துக்கு காவல் துறை அனுமதி கொடுத்தது.
இதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு மாநில கட்சி பரப்புரை செய்திருக்கிறது. 10 ஆயிரம் பேர் வருவார்கள் என தவெகவினர் சொன்னார்கள். ஆனால், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். அதை முன்கூட்டியே மனதில் வைத்துதான் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்று தவெக தலைமைக் கழக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணி முதலே கூட்டம் சேரத் தொடங்கியது. ஆனால், அவர் வந்ததோ இரவு 7.40 மணிக்கு. காலையிலிருந்து அங்கே காத்திருந்த மக்களுக்கு சரியான முறையில் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை.
விஜய் வரும்போதே கூட்டம் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. ஊருக்குள் போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு கூட்டத்தை அழைத்து வந்தனர். இதனை விஜய்யும் குறிப்பிட்டு போலீஸாருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இப்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன்.
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்தப் பொதுக் கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வந்துள்ளது.
தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைகாட்சியை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கட்சி மட்டுமல்ல, அதிமுக சார்பில் நான் நடத்தும் பயணத்திலும் காவல் துறை முழுமையான பாதுகாப்பு தரவில்லை.
இந்த அரசு ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல் நடுநிலையோடு நடக்கவேண்டும். முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.
அதேபோல ஒரு அரசியல் கட்சி தலைவரும், அதை கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அவர் சுற்றுப் பயணம் செல்லும் மாவட்டங்களில் என்னென்ன குறைபாடு இருக்கிறது என்று அவரும் ஆலோசனை செய்து முன்னேற்பாடுகளை நடத்தியிருக்க வேண்டும்.
ஒரு பொதுக் கூட்டம் என்றால், அந்த அரசியல் கட்சியை, அரசை, காவல் துறையை நம்பித்தான் பொதுமக்கள் வருகிறார்கள். ஒரு நேரத்தை அறிவித்துவிட்டு பலமணி நேரம் கழித்து வரும்போது அதில் சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும்.
இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. இது மிகுந்த வேதனையை தருகிறது” என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், “கரூர் சம்பவத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதனால், யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. காவல் துறை தரப்பில் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமான கூட்டம் வரும்போது சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டும்.
வாரம்தோறும் சம்பந்தப்பட்ட தலைவர் வருகிறார். அவரிடமும் இது குறித்து கேளுங்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகமும் அறிக்கை கேட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“கரூரில் நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிக மிக கனத்துப் போயிருக்கிறது. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்சம் ரூபாய், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்க எண்ணுகிறேன்.
இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உரிய தீர்வு காணவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனைக் கதைகளையும் பரப்பித் தனது சுய அரசியல் ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரிகம் என தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
'உயர் நீதிமன்றம் உடனடியாக கரூர் சம்பவத்தில் தலையிட்டு வழக்குப் பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தவெக தலைவர் விஜய் மீதும், பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ பிரச்சாரங்களைத் தடை செய்ய வேண்டும்' என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூர் சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் கரூர் மாவட்டம் மாவட்டத்தில் கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன.
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் குடும்பங்களுக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்கை அறிவித்துள்ளார்.
கருர் அருகே ஏமூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்ஷனா (9), சாய் ஜீவா (5) உயிரிழந்துள்ளனர். மேலும், ஏமூரை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்தி என்பவரின் மனைவி பிரியா, இவர்களது மகள் தரணிகா ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓபன்னீர்செல்வம்: கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்திருக்கவேண்டும். சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புகளை முறைப்படுத்த இருக்கவேண்டும் என்றார்.
ஜி.கே.வாசன்: இச்சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு தீர்வு காணவேண்டும். அரசயில் செய்யவேண்டிய நேரமில்லை. துரையமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆளுங்கட்சிக்கு அதிகப்படடியான பாதுகாப்புகள் வழங்குபவர்கள். எதிர்க்கட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை. இதுபோன்ற துயர சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நிரந்தரமாக பாதிப்பு இல்லாத வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தாமதப்படுத்தாமல் 2 வாரங்களுக்கு முடித்து உரிய நீதி வழங்கவேண்டும் என்றார்.
கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்தத் தமிழகத்திற்குத் தவறான மன ஓட்டத்தைப் புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமிதான்! - கூட்டத்தைக் காட்டுவதற்கு முட்டுச் சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி கேவலமான அரசியலாக இருக்கிறது என்று திமுக சாடியுள்ளது.
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு போலீஸார் ஓரளவுதான் பாதுகாப்புத் தர முடியும். கரூர் சம்பவத்திலிருந்து அரசியல் கட்சிகள் பாடங்களைக் கற்க வேண்டும் என மதுரையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதிலளிக்காமல் சென்றார்.
கருர் சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், “ நீதிபதியிடம் இதுகுறித்து முறையீடு செய்துள்ளோம். நாளை மதியம் 2.15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விரிவாக பேச வேண்டாம்” என்றார். மேலும், நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் இதுகுறித்து எங்கள் கருத்தை தெரிவிப்போம் என்றார்.
அன்புமணி ராமதாஸ்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். தவிர்த்திருக்கலாம். விஜய்யின் பிரச்சாரத்துக்கு பெரிய இடத்தில் அனுமதி தந்திருக்கலாம். கூட்டத்துக்கு தேவையான உணவு, தண்ணீர் வசதிகளை செய்திருக்க வேண்டும். மக்களும் பாதுகாப்பாக வந்திருக்க வேண்டும். கூட்டத்துக்கு விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததுதான் பிரச்சினைக்குக் காரணம்.
கார்த்தி சிதம்பரம்: கரூர் கூட்ட நெரிசல் பின்னணியில் திமுக இருக்கிறது என்று கூறுவோர் ஆதாரங்கள் இருந்தால் சொல்லட்டும்.
கரூர் துயரத்துக்கு இடையே, நாமக்கல்லில் விஜய் பிரச்சாரத்துக்காக அனுமதியின்றி பல இடங்களிலும் பேனர்கள் வைத்ததாக தவெக மாவட்டச் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக பிரச்சாரங்களுக்கு தடை கோரி கரூர் கூட்டத்தில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.
சிதறிக்கிடக்கும் காலணிகள், தவெக தொண்டர்கள் அணிந்திருந்த கசங்கிய கட்சி துண்டுகள், கிழிந்து கிடக்கும் பேனர்கள் என கரூர் வேலுசாமிபுரத்தின் கூட்டம் நடந்த இடம் சோகத்தின் அத்தனை வடுக்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.