
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் ஐந்து ஏ-321 ரக விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 17 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கன்ட்ரோல் டவர் உள்ளது.
தீயணைப்பு படைக்கான புதிய கட்டிடம், 3 ஏரோ பிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகமும் புதிய முனையத்தில் உள்ளன.
சிற்றுண்டி கடைகள், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறையும் உள்ளன.
செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான இடங்கள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், பயணிகள் வெளியே வருவதற்கான 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்ட்டர்களும் உள்ளன.
ஒரு மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக உள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய புதிய பயணிகள் முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார்.