பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார்.
பிராண பிரதிஷ்டை விழாவில் கோயில் அர்ச்சகர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியார் பூஜைகளை செய்தனர்.
கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். மேலும், பல்வேறு அர்ச்சனைகளை செய்தனர். குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, பகவான் ராமருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காண்பித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் குழந்தை ராமரை தரிசித்து நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
4.5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட குழந்தை ராமர், வலது கையில் அம்பையும் இடதுகையில் வில்லையும் ஏந்தி நிற்கிறார்.
தலையில் தங்க கிரீடம் உள்ளது. சிலையின் தோரணத்தில் கிருஷ்ணரின் 10 அவதாரங்களும் நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளன.
குழந்தை சிலையின் உயரம் 4.5 அடியாகும். சுமார் 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டது.
குழந்தை ராமர் சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.