உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ யானை சுமந்து சென்றது.
கி.பி. 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர் விஜயதசமியை முன்னிட்டு தசரா விழாவை கொண்டாட தொடங்கினார்.
10 நாட்கள் வண்ண மயமாக நடைபெறும் இவ்விழாவை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவதால் மைசூரு தசரா உலகப் புகழ் பெற்றது.
414-வது ஆண்டாக இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தார்.
மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, ரயில் நிலையம்,பழங்கால கட்டிடங்கள், பிருந்தாவன தோட்டம், கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால் மைசூரு விழாக்கோலம் பூண்டது.