

கீவ்: ரஷ்யா மீது நடத்தப்பட்டு வரும் நீண்டதூரம் தாக்கும் ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கையை நாளொன்றுக்கு 1,000 ஆக உயர்த்த உக்ரைன் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தற்போது நாளொன்றுக்குச் சராசரியாக 300 ட்ரோன்கள் வரை ஏவப்பட்டு வரும் நிலையில், இந்தத் தாக்குதல்களை மூன்று மடங்காக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், “ரஷியாவுக்கு எதிரான நமது தற்காப்பு தாக்குதல்களை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். ரஷ்யா மீது நாளொன்றுக்கு 1,000 நீண்டதூரம் தாக்கும் ட்ரோன்களை ஏவுவதே நமது இலக்கு. இந்த இலக்கை நோக்கி நாம் தீவிரமாகச் செயல்பட்டு அதை நிச்சயமாக அடைவோம்" என்று உறுதியளித்துள்ளார்.
உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் பேர்ம், நிழ்னி நோவ்கோரோட் மற்றும் யாரோஸ்லாவ் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷ்யாவின் உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி 70 சதவீதமாகக் குறைந்து, பல பிராந்தியங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யா மாதம் ஒன்றுக்குத் புதிதாகப் படைக்கு சேர்க்கும் வீரர்களின் எண்ணிக்கையை விட, சுமார் 6,000 வீரர்களை அதிகமாக இழந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாளொன்றுக்கு 1,000 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டாலும், போரில் நிகழும் இழப்புகளை ரஷ்யாவால் ஈடுசெய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால் உக்ரைனின் உணவுப் பொருட்கள் விநியோகக் கிடங்குகள் மற்றும் உணவு விநியோகக் கட்டமைப்பு 90 சதவீதம் வரை சேதமடைந்துள்ளதாக உக்ரைன் விவசாயத் துறை அமைச்சர் தாரஸ் வைசோட்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் குளிர்காலத்தைச் சமாளிக்கத் தேவையான 14.6 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயு நிலத்தடிச் சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.