‘மதுரோவை போல புதினையும் கைது செய்வீர்களா’ என்ற கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதில்!

‘மதுரோவை போல புதினையும் கைது செய்வீர்களா’ என்ற கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதில்!
Updated on
1 min read

வாஷிங்டன் டிசி: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது போல ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அதற்கான அவசியம் இல்லை என டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு போதைப் பொருட்களை தொடர்ந்து கடத்துவதாக குற்றம்சாட்டி, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கடந்த வாரம் சனிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் அவரது மாளிகையில் இருந்து கைது செய்யப்பட்டார். உலகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த அதிரடி நடவடிக்கை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

மதுரோ கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெலன்ஸ்கி, “ஒரு சர்வாதிகாரி இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்றால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவுக்குத் தெரியும்” என கூறி இருந்தார். ரஷ்ய அதிபருக்கு எதிராகவும் அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு டொனால்டு ட்ரம்ப்பிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவர், ‘நிகோலஸ் மதுரோவை போல புதினுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா?’ என்றார்.

இதற்கு மிகவும் இயல்பாக பதில் அளித்த ட்ரம்ப், ‘‘அது அவசியமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்களுக்கும் அவருக்கும் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. எப்போதுமே இருக்கிறது” என தெரிவித்தார்.

முன்னதாக, எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், ‘‘ரஷ்யா - உக்ரைன் மோதல் முடிவுக்கு வராதது ஏமாற்றம் அளிக்கிறது. நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன். நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். இந்த போரை எளிதாக நிறுத்திவிட முடியும் என்று நான் நினைத்தேன்.

இந்த மோதலால் கடந்த மாதம் 31,000 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பலர் ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். ரஷ்ய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. எனினும், நிச்சயம் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என நினைக்கிறேன். இதை முன்பே முடிக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், நிறைய வீரர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’’ என தெரிவித்தார்.

‘மதுரோவை போல புதினையும் கைது செய்வீர்களா’ என்ற கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதில்!
‘ஹிஜாப் அணிந்த பெண் ஒருநாள் இந்திய பிரதமர் ஆவார்’ - ஒவைசி பேச்சும், பாஜக எதிர்வினையும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in