

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எங்களது பங்குக்கு உரிமை கோரும் கைகளை துண்டிப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் முசாதிக் மாலிக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
சிந்து நதி நீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவை, பாகிஸ்தான் பலமுறை வலியுறுத்தியது.
இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தானின் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் முசாதிக் மாலிக் பேசியுள்ளார். இதில் இந்தியா மீது அவர் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
“அண்டை நாட்டின் பிரதமர் நீர் திறப்பை கட்டுப்படுத்துகிறார். பாகிஸ்தானுக்கு ஒரு துளி தண்ணீர் கூட செல்ல விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார். ஒப்பந்தத்தின்படி எங்களது பங்குக்கு உரிமை கோரும் கைகளை நாங்கள் துண்டிப்போம்” என்று முசாதிக் மாலிக் கூறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
அவருடன் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் கலந்து கொண்டார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாகத் தொடர்ந்து செல்லுபடியாகும். அதை ஒருதலைப்பட்சமாக இடைநிறுத்தவோ, ரத்து செய்யவோ அல்லது திருத்தவோ முடியாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச ஆதரவு உள்ளது என்று அவர் கூறினார்.