வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் | இருமுனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

வாக்களித்த தாரிக் ரஹ்மான்

வாக்களித்த தாரிக் ரஹ்மான்

Updated on
2 min read

டாக்கா: பெரும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையே வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் இஸ்லாமிய ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்துக் கணிப்புகள் வங்கதேச தேசியவாதக் கட்சியே வெற்றிபெறும் என தெரிவித்துள்ளன.

2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த போராட்டங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவரது கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கும், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) காலைக்குள் முடிவுகள் தெளிவாகத் தெரியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வங்கதேசத் தேர்தலில் 50 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தத் தேர்தல் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும், நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான 11 கட்சி கூட்டணிக்கும் இடையிலான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் பிஎன்பி கட்சியின் தலைவராக உள்ளார். பிஎன்பிக்கு போட்டியாக இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணியில் 11 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் கட்சியும் இந்த கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ளது.

எதிர்பாராத சம்பவங்கள்: இன்றைய தேர்தலில் வாக்களித்தப் பிறகு பேசிய பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், “நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் எனக்கு இன்னும் தகவல்கள் வரவில்லை. இருப்பினும், நேற்று இரவு எங்களுக்கு சில எதிர்பாராத தகவல்கள் கிடைத்தன, அவை விரும்பத்தகாதவை. இருப்பினும், சட்ட அமலாக்க நிறுவனங்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகவும் கண்டிப்பாகக் கையாண்டிருப்பதைக் கண்டோம். இன்று மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகளுக்கு வந்து வாக்களித்தால், எந்தவொரு சதித்திட்டத்தையும் முறியடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

வாக்களிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளது. முடிவு குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது சரியல்ல. ஆனால், ‘இன்ஷா அல்லா’, நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மக்களின் தீர்ப்பில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.' என்றார்.

வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், “தயவுசெய்து அனைவரும் வாக்களியுங்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது முக்கியம், ஆனால், அனைவரும் வாக்களிப்பது ஜனநாயகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யும்" என்று வாக்களித்த பிறகு அவர்கூறினார்.

ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணியின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், “வாக்கு மோசடி குறித்து எந்தவொரு குற்றச்சாட்டும் தீவிரமானதாக இருந்தால், நாங்கள் யாரையும் விடமாட்டோம், தேவையானதைச் செய்வோம். மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்கேற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று டாக்காவில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தத் தேர்தலில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1,755 வேட்பாளர்கள் மற்றும் 273 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். பிஎன்பி அதிகபட்சமாக 291 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, இதில் 83 பெண் வேட்பாளர்கள் உள்ளனர்.

<div class="paragraphs"><p>வாக்களித்த தாரிக் ரஹ்மான்</p></div>
India - US Trade Deal ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ - ட்ரம்ப் கருத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in