

சவுத்ரி அன்வர் உல் ஹக்
முசாஃபராபாத்: செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ என அறியப்படும் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் சவுத்ரி அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அண்மையில் டெல்லி - செங்கோட்டையில் நடந்து கார் குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதலை சுட்டிக்காட்டி சவுத்ரி அன்வர் உல் ஹக் பேசியுள்ளார்.
“பலூசிஸ்தானில் அமைதியற்ற சூழல் தொடர்ந்தால் இந்தியாவை செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை தாக்குவோம் என நான் முன்பே சொல்லி இருந்தேன். இறைவனின் அருளால் நாம் அதை செய்துள்ளோம். அவர்கள் இன்னும் உயிரிழந்தவர்களின் உடல்களை எண்ணிக் கொண்டுள்ளனர். ஆயுதத்துடன் டெல்லிக்குள் நுழைந்த நபர், இந்த தாக்குதலை நடத்தினார்” என சவுத்ரி அன்வர் உல் ஹக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் தற்போது தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இப்படி இந்தியா மீது தொடர்ந்து பழி சொல்லி வருகிறது பாகிஸ்தான். இதற்கு முன்பும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்தியா மீது இது மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்தது உண்டு.