

போப் லியோ
லண்டன்: ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வருபவர்களை குடும்பத்தினராக கருதி வரவேற்கும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் மெட்ஸ் நகருக்கு பயணித்தது குறிப்பிடத்தக்கது.
“போர் மற்றும் இன்னும் பிற துன்புறுத்தல் காரணமாக ஆண்கள், பெண்கள் என அதிகம் பேர் அடைக்கலம் தேடி செல்வதை நாம் காண்கிறோம். அண்மையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் கேனரி தீவுகளில் அதிகளவில் புலம்பெயர்ந்திருந்தனர்.
அப்படி வரும் மக்களை நாம் வரவேற்க வேண்டும். நமது சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அவர்களை கருத வேண்டும். அவர்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப அவர்கள் வாழ்வதற்கும் அனுமதிக்க வேண்டும்” என்று போப் 14-ம் லியோ தெரிவித்தார்.
மேலும், ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சி சார்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை அவர் வரவேற்றார். அதே வேளையில் புலம்பெயர்ந்து வரும் மக்களுக்கு அந்த நாட்டின் வரலாற்றை அறிய செய்ய வேண்டும்.
பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவினர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும். ஆயுதச் கொள்முதல் அல்லது பயன்பாட்டுக்கான செலவுகளை அதிகரிப்போம் என்ற உலக தலைவர்களின் அழைப்பையும் அவர் விமர்சித்தார். பிரான்ஸ் நாட்டின் கருக்கலைப்பு உரிமை குறித்தும் அவர் விமர்சித்தார்.
வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் தாயகத்தில் இருந்து வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடி புலம்பெயர்ந்து செல்வது வழக்கம்.
அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஸ்பெயின் அரசு ஈடுபட்டது. இந்நிலையில், போப் லியோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து செல்பவர்களுக்கு எதிராக அந்தந்த நாடுகளை சேர்ந்த உள்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் உண்டு. தங்களது வாய்ப்புகளை புலம்பெயர்ந்தோர் பறிப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.