

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இதுவரை ரூ.18 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தொகையை அமெரிக்க அரசு திருப்பி வழங்காது என்று அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தும் மாகாணங்களின் அரசுகள், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப்புக்கு இலினாய்ஸ் மாகாண ஆளுநர் பிரிட்ஸ்கர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களது (ட்ரம்ப்) புதிய வரி விதிப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களின் அன்றாட மளிகைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் உங்களது வரி விதிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. புதிய வரி விதிப்பால் இலினாய்ஸ் மாகாண மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எங்கள் மாகாணத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1.54 லட்சத்தை திருப்பி வழங்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இலினாய்ஸ் மாகாணத்தில் மொத்தம் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதை கணக்கிட்டு இலினாய்ஸ் மாகாணத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு ஆளுநர் பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதேபோல ஜனநாயக கட்சிகள் ஆட்சி நடத்தும் பல்வேறு மாகாண அரசுகள் சார்பில் அதிபர் ட்ரம்புக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொருளாதார நிபுணர் மனோஜ் மிஸ்ரா கூறும்போது, “புதிய வரிவிதிப்பின் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையை அமெரிக்க மாகாணங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு வழங்குவது மிகவும் கடினம். அவ்வாறு வழங்கினால் அமெரிக்க பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும்" என்று தெரிவித்தார்.