

வாஷிங்டன்: கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பல் 330 மீட்டர் நீளம் கொண்டது. 3 லட்சம் டன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. ஈரான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட டிபானி கப்பல் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அமெரிக்க கடற்படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர்கள் மூலம் டிபானி கப்பலில் இறங்கி அந்த கப்பலை கைப்பற்றினர். இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க கடற்படை வெளியிட்டு உள்ளது. அதோடு வெளியிடப்பட்ட பதிவில், “பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஈரான் கப்பலை சர்வதேச கடல் பகுதியில் கைப்பற்றினோம். தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை அனுமதிக்க மாட்டோம்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் சரக்கு, எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவது போர் நிறுத்த மீறல் ஆகும் என்று அந்த நாட்டு தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “போர் நிறுத்தத்தை பலமுறை ஈரான் மீறியிருக்கிறது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.