

டெஹ்ரான்: அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால், ஈரானின் பல நகரங்கள் மீது அமெரிக்க கடற்படை நேற்று கடும் தாக்குதல் நடத்தின.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் அவ்வப்போது இருதரப்புக்கு இடையிலும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின. ஆனால், திட்டமிட்டு ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்தது.
எனினும், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தெற்கு ஈரான் பகுதியில் உள்ள குவாஷெம் தீவு, ஜாஸ்க், சிரிக், பந்தார் அப்பாஸ் உட்பட பல நகரங்கள் மீது அமெரிக்க கடற்படை நேற்று கடும் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள், ரேடார் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக ஈரான் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுளவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறும்போது, ‘‘ஈரானின் உறுதிப்பாட்டை அமெரிக்கா சோதித்து பார்க்கிறது. எங்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் சரியான பதில் அளிப்போம். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், எங்கள் பிராந்தியத்தை விட்டு சென்று விடுங்கள்’’ என்று எச்சரித்தார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படை (ஐஆர்ஜிசி) நேற்று தெரிவித்தது. இந்த தகவலை பஹ்ரைன் அரசு உறுதி செய்துள்ளது.