

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்கு, எப்படிக் கொல்வது என்பது குறித்த விவரங்களுடன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
மேலும், அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் (ரூ.95 கோடி) பரிசையும் அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானிய தொலைக்காட்சியின் சேனல் 3-ல் ஒளிபரப்பான வீடியோவில், பாரனின் அன்றாட நடமாட்டங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அந்த வீடியோ, அமெரிக்க ரகசியப் பாதுகாப்புப் படையையும் மீறி ஒரு பெண் பாரனைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது.
“இது தொடக்கம் மட்டுமே. பாரன் ட்ரம்ப், எங்களுக்காக காத்திரு” என்ற நேரடி எச்சரிக்கையுடன் அந்த வீடியோ முடிவடைந்தது. மெலனியா ட்ரம்பை இலக்கு வைத்து, ‘மெலனியாவை கொல்வது எங்கே?’ என்ற தலைப்பில் ஈரான் அரசு தொலைக்காட்சி கடந்த மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டது.
நியூயார்க் நகரில் அவர் பயணிக்கும் வாகன வரிசை மற்றும் அவர் வழக்கமாக செல்லும் பிரபல ஆடை அங்காடிகள் அதில் காட்டப்பட்டன. இந்த மிரட்டலையடுத்து, மெலனியா, பாரன் ஆகிய இருவருக்கும் அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.