

வாஷிங்டன்: ஈரானில் ரேசா பஹ்லவியால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேவையான ஆதரவை பெற முடியுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் நாட்டில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அயத்துல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஈரான் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ரேசா பஹ்லவி நல்லவராக உள்ளார். இருந்தாலும் ஈரானில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு அவருக்கு எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அது அவருக்கு அங்கு கிடைக்கும் உள்நாட்டு ஆதரவை பொறுத்துதான் இருக்கும். அவர் ஆட்சி பொறுப்புக்கு வருவது நன்மை சேர்க்கும். ஈரானில் ஆட்சி கவிழுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கான வாய்ப்பு உள்ளது” என தனியார் ஊடக நிறுவனத்துடனான பேட்டியில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார்.