“ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்... சரண் அடையாவிட்டால் முழு வீழ்ச்சி!” - ட்ரம்ப் எச்சரிக்கை

“ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்... சரண் அடையாவிட்டால் முழு வீழ்ச்சி!” - ட்ரம்ப் எச்சரிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரான் போர் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், ‘ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும். ஈரான் சரண் அடையாவிட்டால் முழுமையாக வீழ்ச்சி அடையும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. மேலும் அண்டை நாடுகளிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஈரான் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த நாட்டின் அத்துமீறல்களால் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கின் அமைதி பாதிக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஈரானின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய இழப்பை அந்த நாடு சந்தித்து உள்ளது. அந்த நாட்டை நரகத்துக்கு தள்ளி உள்ளோம். இதற்காக ஈரானின் அண்டை நாடுகள், எனக்கு நன்றி தெரிவித்துள்ளன. இன்றைய தினம் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும். ஈரான் சரண் அடையும். இல்லையெனில் முழுமையாக வீழ்ச்சி அடையும். ஈரான் ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டு வருகிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுவரை...

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் 8-வது நாளாக இன்றும் நீடித்தது. ஈரானில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஈரானின் வான் பாதுகாப்பு கவசங்களில் 80 சதவீதம் அழிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் கடற்படையின் 30 போர்க்கப்பல்கள் தகர்க்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டு விமானப் படையில் 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட 174 நகரங்களின் அரசு கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன.

ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாடு முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ தளங்கள் செயல்படுகின்றன. இந்த தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில், தாட் வான் பாதுகாப்பு கவசத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

“ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்... சரண் அடையாவிட்டால் முழு வீழ்ச்சி!” - ட்ரம்ப் எச்சரிக்கை
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலர்களை கடந்தது: மேற்காசிய போர்ச் சூழல் எதிரொலி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in