ஹார்முஸில் ஈரான் கப்பலை கைப்பற்றிய ‘யுஎஸ் மரைன்ஸ்’ - பதிலடிக்கு தெஹ்ரான் சூளுரை

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்

Updated on
2 min read

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்காவின் மிக முக்கியப் படைப்பிரிவான் யுஎஸ் மரைன்ஸ், அந்த வழியாகச் சென்ற ஈரான் கொடி பறந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக சூளுரைத்துள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இரு தரப்புக்கும் இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், பாகிஸ்தான் அரசு எடுத்த சமரச முயற்சி காரணமாக இரு வார காலத்துக்கான போர் நிறுத்தம் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும், நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான ஈரான் குழுவினரும் இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் இஸ்லாமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனிடையே, போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும் ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்கா கூறியது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக அறிவித்த ஈரான், சில மணி நேரங்களில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவ்வழியைக் கடக்க முயன்ற கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகையை மீறி ஈரான் கொடி ஏற்றப்பட்ட அந்நாட்டின் சரக்கு கப்பல் ஒன்று சென்றது. அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க கடற்படை, அந்த சரக்கு கப்பலை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

ஓமன் வளைகுடாவில் இருந்த அமெரிக்க கடற்படையின் ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல் ஒன்று, ஈரான் கொடி ஏற்றப்பட்ட தவுஸ்கா என்ற கப்பலை நிறுத்துமாறு எச்சரித்ததாகவும் பின்னர் அந்த கப்பலின் இயந்திர அறையில் ஒரு துளையை ஏற்படுத்தி கப்பலை இருந்த இடத்திலேயே நிறுத்தியதாகவும் அதிபர் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட அந்த கப்பலை அமெரிக்க கடற்படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும், கப்பலுக்குள் சென்ற அமெரிக்க கடற்படை வீரர்கள், அதில் என்ன இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு நடத்தி உள்ளனர். ஈரான் கப்பலுக்கு தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் எச்சரிக்கைகளை விடுத்ததாக அமெரிக்க மத்திய கட்டளை குழு தெரிவித்துள்ளது.

ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை கடந்த வாரம் தொடங்கியதில் இருந்து ஈரான் கப்பல் ஒன்று தாக்கப்படுவதும் கைப்பற்றப்படுவதும் இதுவே முதல் முறை. ஈரான் கப்பலுக்குள் அமெரிக்காவின் ஆயுதம் ஏந்திய கடற்படையினர் சென்றது போர் நிறுத்த மீறல் என குற்றம் சாட்டியுள்ள ஈரான் கூட்டு ராணுவத் தலமை அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இரண்டு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான காலக்கெடு நெருங்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மீண்டும் போர் தீவிரமடைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா கடற்படை கப்பல்</p></div>
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in