

வாஷிங்டன்: அமெரிக்கா, ஈரான் இடையிலான போரை நிறுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஈரானில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க ராணுவ தரப்பில் 13 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். சுமார் 700 அமெரிக்க வீரர்கள் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 7,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போரால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, பத்து நாட்களுக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் அல்லது ஹார்முஸல் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லையெனில் ஈரான் நரகமாக மாறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விதித்த காலக்கெடு இந்திய நேரப்படி ஏப்ரல் 7-ம் தேதி அதிகாலையுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் அமெரிக்கா, ஈரான் இடையே திரைமறைவில் அதிதீவிரமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் சமரச தூதுவர்களாக செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமைகளில் தொலைபேசியில் மிக நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் அடிப்படையில் போர் நிறுத்த வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 45 நாட்கள் போர் நிறுத்தத்தை அமல் செய்ய வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஈரான் ஒப்படைக்க வேண்டும். மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வரைவு திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
ஈரான் அரசியல் தலைவர்கள் மற்றும் அந்த நாட்டின் ராணுவ தளபதிகள் பொது அரங்கில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி வருகின்றனர். ஆனால் திரைமறைவில் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஈரான் வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்காவுடன் நாங்கள் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
சில நாடுகள் சமரச முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. அந்த நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து காசா, லெபனானில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. ஆனால் இரு அமைதி ஒப்பந்தங்களும் காகித அளவில் மட்டுமே உள்ளன. இப்போதும் காசா, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதே நிலை எங்களுக்கும் ஏற்படும். எனவே தற்காலிக போர் நிறுத்தத்தை நம்பி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது. எந்தவொரு காலக்கெடுவையும் ஏற்க முடியாது’’ என்று தெரிவித்தன.
போர் நிறுத்த வரைவு திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அன்ட்ராபியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அவர் கூறும்போது, “இப்போதைய சூழலில் பகிரங்கமாக எந்த தகவலையும் வெளியிட முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்று தெரிவித்தார்.
ஈரான் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி உயிரிழப்பு
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது நேற்று அதிகாலையில் வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தனது டெலிகிராம் சேனலில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘அதிகாலையில் அமெரிக்க-சியோனிச (இஸ்ரேல்) எதிரிகள் நடத்திய தாக்குதலில், ஐஆர்ஜிசி உளவு அமைப்பின் வலிமையான மற்றும் கல்வி அறிவு மிக்க தலைவரான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி வீரமரணமடைந்தார்’’ என கூறப்பட்டுள்ளது.
34 பேர் உயிரிழப்பு: ஈரான் முழுவதும் நேற்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. தலைநகரின் ஆசாதி சதுக்கத்துக்கு அருகே உள்ள ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு அடர்ந்த கரும்புகை எழுந்தது. டெஹ்ரானின் பஹாரெஸ்டன் பகுதியில் 6 சிறுவர்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். குவாம் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேரும் பந்தர்-இ-லெங்கே பகுதியில் 6 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.