

தெஹ்ரான்: ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனே வெளியேறுமாறு அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு பகைமை பாராட்டி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2025 டிசம்பர் முதல் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர அடக்குமுறைக்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அப்போது முதல் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதால் தங்கள் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ட்ரம்ப் கோரி வருகிறார். ஈரானை அச்சுறுத்த அமெரிக்க போர்க் கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மத்தியஸ்த நாடுகளில் ஒன்றான துருக்கி, இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க முயன்று வருகிறது. ஈரான் தனது அணு ஆயுத திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தாலும் ஈரானின் ஏவுகணைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ட்ரம்ப் கூறி வருவதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் உள்ள அமெரிக்க மக்கள் உடனே ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரானில் உள்ள மெய்நிகர் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரானை விட்டு அமெரிக்கர்கள் உடனே வெளியேற வேண்டும். அமெரிக்க அரசின் உதவியை சாராத ஒரு வெளியேறும் திட்டத்தை நீங்கள் வகுக்க வேண்டும். இணைய பயன்பாட்டுக்கு தடை ஏற்படலாம். தகவல் தொடர்புக்கு மாற்று வழிகளைத் திட்டமிட வேண்டும். விமான சேவை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருந்தால் சாலை மார்க்கமாக ஆர்மீனியா அல்லது துருக்கி செல்லலாம்.
ஈரானை விட்டு வெளியேற முடியாவிட்டால் வசிப்பிடத்தில் பாதுகாப்பான இடத்தை கண்டறியுங்கள். உணவு, தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்திருங்கள். பிறர் கவனத்தை ஈர்க்காமல் இருங்கள், உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி விழிப்புடன் இருங்கள். உங்கள் நிலை குறித்து தெரிவிக்க குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.