

வாஷிங்டன்: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது அதை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டித்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம்.
கடந்த பிப்.28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி தந்தது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்த தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கடலில் உள்ள ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்தது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்தது அமெரிக்கா. இந்த வரி விதிப்பு இந்தியா மீதும் சுமத்தப்பட்டது. அதன் பின்னர் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக் கொண்டது. இத்தகைய சூழலில் மேற்காசிய போர் காரணமாக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க முப்பது நாட்கள் விலக்கு அறிவித்தது அமெரிக்கா. அந்த விலக்கு ஏப்.11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது அதை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்துள்ளது அமெரிக்கா.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க கருவூல அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ரஷ்யா கச்சா எண்ணெய் உடன் கடல் பயணத்தில் உள்ள சரக்கு கப்பல்களில் இருந்து உலக நாடுகள் கொள்முதல் செய்ய கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது அந்த அனுமதி மே 16 வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் சிக்கல் இருக்காது.