

வாஷிங்டன்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) அடுத்தடுத்து இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முயற்சிக்கு சரியான பதிலடி கொடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஓமன் வளைகுடாவில் ‘எம்/டி கவிஸ், எம்/டி சார்மினார், எம்/டி ஹாரிசன் 1, எம்/டி ரிஸ்கோ’ மற்றும் கார்க் தீவு அருகே ‘எம்/டி டெரியா’ ஆகிய 5 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
இந்த 5 ஈரானிய எண்ணெய் டேங்கர்கள் அழிக்கப்பட்டதைக் காட்டும் செயற்கைக்கோள் வீடியோ காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) செப்டம்பர் 8 அன்று வெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக கப்பல்களில் இருந்த மாலுமிகளை வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள தனது தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈரான் இந்த நிழல் உலகக் கப்பல் வலைப் பின்னலைப் பயன்படுத்தி வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என மொஜ்தபா கமேனி தலைமையிலான ஈரானின் ஐஆர்ஜிசி படை எச்சரித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 5-ம் தேதியும் ஈரானின் 3 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்திருந்தன. ஈரானியப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக முறியடித்துத் தப்பியோடிவிட்டதாகவும், அமெரிக்க வீரர்கள் யாருக்கும் காயமோ பாதிப்போ ஏற்படவில்லை என்று சென்ட்காம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையைக் குறிவைத்து ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை புதிய தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் 27 விமான நிறுவனங்கள், மஹான் ஏர் நிறுவனத்துக்கு சேவைகளை வழங்கிய 9 முகவர்கள் மீது இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மஹான் ஏர், ஐஆர்ஜிசி படைக்கு உதவி செய்வதாகக் கூறி 2011 முதல் அமெரிக்காவின் தடைப்பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.