

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்தியாவின் 2 புதிய துணைத் தூதரகங்களை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று திறந்து வைத்தார்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் யெகாடெரின்பர்க், கசான் ஆகிய நகரங்களில் இந்தியாவின் 2 புதிய துணைத் தூதரகங்களை அவர் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இரண்டு புதிய தூதரகங்கள் திறக்கப்படுவதால் இந்தியா-ரஷ்யா உறவுகள் மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். எங்கள் உறவில் நிச்சயமாக ஒரு புதிய கட்டத்தை இது குறிக்கும். இரு நாடுகள் இடையே தொழில்நுட்பம், அறிவியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய தூதரகங்கள் உதவும். மேலும் ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு சேவையாற்றும்” என்றார்.
சைபீரியாவுக்கான நுழைவாயிலாக யெகாடெரின்பர்க் உள்ளது. ரஷ்யாவின் மூன்றாவது தலைநகரமாக இது கருதப்படுகிறது. கனரக பொறியியல், ரத்தின கற்கள் வெட்டுதல், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, உலோகப் பொருட்கள், அணு எரிபொருள், ரசாயனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இப்பகுதி பெயர் பெற்றது.
அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்தும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் அதிபர் புதினுடன் ஆலோசித்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.