

அடாமுஸ்: தெற்கு ஸ்பெயினில் உள்ள அடாமுஸ் நகரத்துக்கு அருகே நேற்று (ஞாயிறு) மாலை இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தெற்கு ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இது நாட்டுக்கு ஆழ்ந்த வேதனை நிறைந்த இரவு என்று கூறினார்.
மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஐரியோ அதிவேக ரயில் அடாமுஸ் அருகே தடம் மாறி மற்றொரு தண்டவாளத்துக்குள் நுழைந்தது. அந்த ரயில் மோதியதில், எதிரே வந்த ரயில் தடம் புரண்டது என்று ஸ்பெயினின் அடிஃப் ரயில் சேவை நிறுவனம் தெரிவித்தது.
நேற்று மாலை 6.40 மணிக்கு (17.40 GMT) மலகாவிலிருந்து ஐரியோ ரயில் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் ஸ்பெயின் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கார் புயன்டே கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 100 பேரில், 25 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அண்டலூசியா மாகாண தலைவர் ஜுவான்மா மோரேனோ தெரிவித்தார். “விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. நேராகச் செல்லும் தண்டவாளப் பாதையில் ரயில் தடம் புரண்டது உண்மையிலேயே விசித்திரமானது. இந்தத் தண்டவாளம் மே மாதத்தில் புதுப்பிக்கப்பட்டது” என்று ஸ்பெயினின் போக்குவரத்துத் துறை அமைச்சர் புவென்டே கூறினார்.
இந்த விபத்தினை தொடர்ந்து மாட்ரிட் மற்றும் அண்டலூசியாவிற்கு இடையிலான அனைத்து ரயில் சேவைகளையும் அடிஃப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.