ஏமன், சோமாலியா கடல் பகுதிகளில் 22 இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்

ஏமன், சோமாலியா கடல் பகுதிகளில் 22 இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: எரித்​திரியா நாட்​டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் ஏமன் கடல் பகு​தி​யில் சென்று கொண்​டிருந்​தது.

இந்த கப்​பலில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்​கள் பணி​யில் இருந்​தனர். ஏமன் கரை​யில் இருந்து 136 கடல் மைல் தொலை​வில் சிபு 1 கப்​பல் சென்று கொண்​டிருந்​த​போது ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள் கப்​பலில் புகுந்​தனர். அங்​கிருந்து சோமாலிய கடற்​பகு​திக்கு சிபு 1 எண்​ணெய் கப்​பலை அவர்​கள் கடத்​திச் சென்​றனர்.

இந்த கப்​பல் ஈரானில் இருந்து கச்சா எண்​ணெயை ஏற்றி பல்​வேறு நாடு​களுக்கு விநி​யோகம் செய்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. தற்​போது எண்​ணெய் கப்​பல் நிர்​வாகம் சார்​பில் சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

மற்​றொரு கப்​பல்...

கேமரூன் நாட்​டைச் சேர்ந்த லுதுப் என்ற சரக்கு கப்​பல் சோமாலியா​வின் புன்ட்​லேண்ட் கடல் பகு​தி​யில் சென்று கொண்டிருந்​தது. இந்த கப்​பலில் 6 இந்​தி​யர்​கள் உட்பட 10 ஊழியர்கள் பணி​யில் இருந்​தனர். புன்ட்​லேண்​டின் மரேயா பகுதியில் சென்று கொண்​டிருந்​த​போது ஆயுதமேந்​திய கடற்கொள்​ளை​யர்​கள் கப்​பலில் ஏறினர்.

அவர்​கள் லுதுப் கப்​பலை சோமாலிய கடற்​பகு​திக்கு கடத்​திச் சென்​றனர். இந்த கப்​பலில் துருக்கி ராணுவத்​துக்கு தேவை​யான ஆயுதங்​கள் கொண்டு செல்​லப்​பட்​டன. இதைத் தொடர்ந்து துருக்கி போர்க்​கப்​பல்​கள் மற்​றும் ஹெலி​காப்​டர்​கள் நேற்று சோமாலிய கடல் பகு​தி​யில் தீவிர ரோந்து பணி​யில் ஈடு​பட்​டன. கடற்​கொள்​ளை​யர்​கள் சென்ற படகு மீது துருக்கி ராணுவ ஹெலிகாப்​டர் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 4 பேர் உயிரிழந்ததாகக் கூறப்​படு​கிறது.

இதுகுறித்து மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து வட்​டாரங்​கள் கூறும்​போது, “ஏமன், சோமாலியா கடல் பகு​தி​களில் ஒரு எண்​ணெய் கப்பல், ஒரு சரக்கு கப்​பல் கடத்​தப்​பட்டு உள்​ளன. இந்த கப்பல்களில் பணி​யாற்​றும் 22 இந்​தி​யர்​களும் பாது​காப்​பாக உள்ளனர். அவர்​களை மீட்க சம்​பந்​தப்​பட்ட கப்​பல் நிறு​வனங்​கள் கடற்​கொள்​ளை​யர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன. 22 இந்​தி​யர்​களை​யும் பாது​காப்​பாக மீட்க மத்​திய அரசும் அதிதீவிர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது” என்று தெரிவித்தன.

இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்போது, ‘‘அண்​மை​யில் அமெரிக்​கா, சீனாவை சேர்ந்த சரக்கு கப்​பல்​களை சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​கள் கடத்​தினர். சம்​பந்​தப்​பட்ட கப்பல் நிறு​வனங்​களிடம் இருந்து பெரும் தொகையை பெற்ற பிறகு இரு கப்​பல்​களு​ம்​ விடுவிக்​கப்​பட்​டன. தற்​போது 22 இந்தியர்களு​டன் கடத்​தப்​பட்ட இரு சரக்கு கப்​பல்​களை​யும் விடுவிக்க சோமாலிய கடற்​கொள்​ளை​யர்​கள் பெரும் தொகையை கோரி வரு​கின்​றனர்’’ என்றனர்.

ஏமன், சோமாலியா கடல் பகுதிகளில் 22 இந்தியர்களுடன் இரு சரக்கு கப்பல்கள் கடத்தல்
மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் விவகாரம்: ராகுல் காந்தி தர்ணாவைத் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in